அகத்தைத் தூய்மைபடுத்துவோம்

எண்ணிக்கை 19: 16 ல் நாம் பார்க்கிறோம்: இறந்தவர்களையோ, கல்லறையையோ தொடுகிறவன் தீட்டுப்பட்டவனாயிருப்பான், என்று சொல்லப்பட்டிருக்கிறது. பாலஸ்தீனப்பகுதியில் பாஸ்கா விழாவின்போது, சாலையோரம் முழுவதும் திருப்பயணிகள் வெள்ளம் திரண்டிருக்கும். நாட்டின் பல பகுதிகளிலிருந்து யெருசலேம் நோக்கி தங்கள் பயணத்தை மக்கள் தொடர்வார்கள். அப்படி அவர்கள் பயணிக்கிறபோது, கல்லறைகளைத் தெரியாமல் தொட்டுவிட்டால், தீட்டாகிவிடுவார்கள். அவர்களது பயணம் தடைபடும். எனவே, ஆதர் மாதத்தில் கல்லறைகள் அனைத்தும் வெள்ளையடிக்கப்படும். இதைப்பார்ப்போர் எச்சரிக்கையோடு விலகிச்செல்வதற்கு இந்த வெள்ளை நிற அடையாளம் உதவியது.

கல்லறைகள் வெளியே பார்ப்பதற்கு அழகாக, வெள்ளையாக, பளபளப்பாக இருந்தாலும், கல்லறைக்கு உள்ளே அழுகிய உடல்கள் தான் இருக்கும். நம்மைத் தீட்டுப்படுத்துவதாகத்தான் இருக்கும். இதுபோலத்தான் பரிசேயர்களுடைய வாழ்வும் என்று, இந்த வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளோடு இயேசு ஒப்பீடு செய்கிறார். பரிசேயர்கள் வெளியே தங்களை நல்லவர்களாக, சட்டங்களைக் கடைப்பிடிப்பவர்களாக, மதிப்பீடுகள் உள்ளவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டாலும், அவர்களுடைய உள்ளமோ மதிப்பீடுகள் இல்லாத உள்ளமாக உள்ளது. அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு, சுயநலம், அகங்காரம், கர்வம், தாங்கள் மட்டும் நல்லவர்கள் என்கிற செருக்கு மற்றும் பொறாமை எண்ணம் எரிந்து கொண்டிருக்கிறது. மீட்பு பெற, பரிசேயர்கள் தங்களது அகவாழ்வை சீர்தூக்கிப்பார்க்க வேண்டும் என்று பணிக்கிறார்.

நம்முடைய உடல் அழகைப்பேணுவதில் அதிக அக்கறை எடுக்கிறோம். அதற்காக பணத்தையும் வாரி இறைக்கிறோம். ஆனால், ஆண்டவர் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது கனிவான இதயத்தை தான். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நல்ல எண்ணத்தை தான். பரிசேயர்களைப்போல அல்லாமல், அகமும், புறமும் தூய்மையானவர்களாக வாழ்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.