அக்கரையில் அவரின் அக்கறை

(யோவான் 21 : 1-14)

உயிர்ப்பும், உயிர்த்த உடலும் எப்படியிருக்கும் என்ற செய்தியைத் தருவதோடு இயேசுவின் அன்பையும் அக்கறையையும் இந்நிகழ்வு இன்னும் அதிகமாக எடுத்துக் கூறுகின்றது.

திருத்தூதர்களில் சிலரைத் தவிர அனைவரும் படிப்பறிவற்ற சாதாரண மீனவர்கள். இவர்களுக்கு இன்றைய அரசியல்வாதிகள் போலவோ, மாமேதைகள் போலவோ கதை கட்டத் தெரியாது. இவர்கள் கற்பனை உலகில் வாழ்பவர்களல்ல. எதார்த்தத்தை எதார்த்தமாக எதிர்ப்பவர்கள். கண்ட காட்சிகளை உடனடியாக ஏற்றுக் கொள்ளுமளவிற்கு முட்டாள்களுமல்ல. தாங்கள் கண்டதை, தொட்டுணர்ந்ததை உலகிற்கு அறிவித்தனர். இயேசு வெறும் ஆவியன்று என்பதற்கு சான்றுதான் இந்நிகழ்ச்சி. அதேநேரத்தில் அவர் நம்மைப் போன்ற உடலைக் கொண்டிருந்ததாகவும் தெரியவில்லை. மாட்சிமை நிறைந்த உடலையே அவர் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆவி, கை நீட்டி இப்பக்கம் வலையைப் போடுங்கள் என்று சொல்லுவதில்லை. நெருப்பு மூட்டி மீன் சாப்பிடுவதில்லை. இதன் மூலம் நமக்கு அதிகமாக இல்லாவிட்டாலும் உயிர்ப்பைப் பற்றிய சில தெளிவுகள் கிடைக்கின்றன.

நமது வாழ்விற்கு இன்றைய நற்செய்தி வலுவூட்டுவதாக அமைகிறது. இயேசு நம் அன்றாட வாழ்க்கையில், பணிகளில் அக்கறை கொண்டவர். நாம் அவரை அழைக்காமலேயே இன்ப துன்பங்களில் பங்கெடுப்பவர். “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று அனுதாபத்துடன் கேட்டவர். “படகின் வலப்பக்கமாக வலையை வீசுங்கள்” என்று ஆலோசனை கூறி நமது பணிகளில் உதவி செய்பவர். பல வேளைகளில் நாம் அழைக்காத போதும் ஓடோடி வந்து உதவுபவர். அதே இயேசுதான் இன்றும் நம்முடன் இருக்கிறார். நம் ஒவ்வொருவருக்கும், நாம் அழைக்காமலேயே உதவக் காத்திருக்கின்றார்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: