அடையாளம் இடப்பட்டோர் தப்பிப் பிழைப்பர் !

எருசலேம் நகருக்கும், கோவிலுக்கும் நிகழவிருக்கும் அழிவைப் பற்றி எரேமியா இறைவாக்கினர் போலவே, எசேக்கியேல் இறைவாக்கினரும் முன் அறிவித்தார். அந்நகரில் நிகழ்ந்து வந்த சிலை வழிபாடுகள் மற்றும் பாவச் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று எச்சரித்தார். ஆனாலும், எந்த மாற்றமும் நிகழாததால், எருசலேமின் அழிவைத் தடுக்க முடியவில்லை. ஆயினும், தங்கள் வழிகளை மாற்றிக்கொண்ட ஒருசிலராவது காப்பாற்றப்பட வேண்டும் என்பது இறைவனின் திருவுளம். எனவே, அவர்களின் நெற்றியில் அடையாளம் இடப்பட்டது. இவர்கள் எருசலேம் நகரில் செய்யப்படும் “எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பும்” மனிதர்கள் என்று இன்றைய வாசகம் குறிப்பிடுகிறது.

நமது நிலை என்ன? நம்மைச் சுற்றி நிகழும் தீய செயல்பாடுகள் குறித்துக் கவலை கொண்டு புலம்புகிறோமா? அவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறோமா? இத்தகைய அழைப்பைத் தருகிறது இன்றைய வாசகம். இல்லாவிட்டால், நாமும் இறைமாட்சியின் சாயலை இழந்துவிடுவோம் என்று எச்சரிப்பும் தருகிறது இன்றைய வாசகம்.

மன்றாடுவோம்: புகழ்ச்சியின் நடுவில் வாழும் மாட்சிமிகு இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களைச் சுற்றி நிகழும் பாவங்கள், தீமைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மன்னிப்பு கோருகிறோம். தீமைகளைச் சுட்டிக்காட்டி, இறைவாக்குப் பணிபுரியும் ஆற்றல் தரவேண்டுமென்று உம்மை வேண்டுகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~ அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: