அனைத்து ஆன்மாக்கள் தினம்

இன்றைய நாளில் அனைத்து ஆன்மாக்களின் திருவிழாவை தாய்த்திருச்சபையோடு இணைந்து கொண்டாட இருக்கிறோம். இந்த கல்லறைத் தோட்டத்தில் பல பேர் அமைதியாக இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே மண்ணில் புதைக்கப்பட்டிருக்கிற பலபேர் நாம் அறிந்தவர்களாக இருக்கலாம். நமது ஊரில் உள்ள பெரியவர்கள், நமது நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள், நமது உடன்பிறந்தவர்கள், நாம் அதிகமாக அன்பு செய்தவர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்கள் இங்கே அமைதியாக இளைப்பாறுகிறார்கள். இவர்களது இறப்பு நமக்கு தரக்கூடிய செய்தி என்ன?

ஏழை, பணக்காரர், நீதியோடு வாழ்கிறவர், அநீதி செய்கிறவர், நல்லவர், கெட்டவர் என ஒருவர் எப்படி வாழ்ந்தாலும், என்றாவது ஒருநாள், இந்த பயணத்திற்கு ஒரு முடிவு வந்தே தீரும். அந்த முடிவு எப்போது வரும் என்று யாருக்குமே தெரியாது. இங்கே இருக்கிறவர்களில் யாராவது, நாம் இன்றைக்கு இறந்து விடுவோம் என்று நினைத்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை. ஒருவேளை அவர்கள் மருத்துவமனையில் கடினமான நோயினால் தாக்கப்பட்டு, சிகிச்சைபெற்றுக்கொண்டிருந்தாலும், மருத்துவர்களால் கைவிடப்பட்டிருந்தாலும், ஏதோ ஒரு நம்பிக்கையோடு தான், நாட்களை நகர்த்தியிருப்பார்களே தவிர, இறப்பு இன்னநேரத்தில் வரும் என்று அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், இறப்பு வந்தே தீரும், அதுதான், இங்கே இந்த கல்லறைத்தோட்டம் நமக்கு கற்றுத்தரக்கூடிய பாடம். இந்த பாடம் நாம் பயப்படுவதற்காக அல்ல, மாறாக, நமது வாழ்வை நல்லமுறையில் வாழ்வதற்காக உதவியாக இருக்க வேண்டும்.

இந்த வாழ்க்கையை எப்போதும் கடவுளுக்கு பிரியமான வகையில் நாம் வாழ்வதற்கு சிரத்தை எடுக்க வேண்டும். எப்போதும் கடவுளின் அருளுக்காக, அவரது ஆசீர்வாதத்தோடு சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக, நாம் வாழ வேண்டும். இறப்பைப் பற்றி கவலை கொள்ளாமல், சிறப்பாக வாழ வேண்டும் என்கிற கவலை, நம்மை சிறப்பாக வாழ தூண்டுகோலாக இருக்கட்டும்.

இல்லாதவர்களுக்கு நமது பங்களிப்பு

இயேசு போதித்த உவமைகளில், இன்றைய உவமை தான் நீண்ட விளக்கத்துடன் போதிக்கப்பட்ட ஓர் உவமை. நமது இறுதிக்காலம் பற்றி வாசகம் நமக்குத்தரப்பட்டிருக்கிறது. வாசகத்தின் மையக்கருத்து, மனித தேவைகளுக்கு நாம் எப்படி பங்களிக்கிறோம்? என்கிற கேள்விதான்.

இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது பெரிய, பெரிய காரியங்களை அல்ல. நாம் செய்யக்கூடிய, செய்ய முடிகின்ற சாதாரண காரியங்கள் தான். இன்றைய உவமையில் இயேசுவின் வலதுபக்கத்தில் இருக்கிறவர்களுக்கு, உண்மையில் தாங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறோம் என்பதும் தெரியவில்லை, தாங்கள் செய்த சிறிய காரியங்கள் இவ்வளவு மகத்துவம் மிக்கவை என்பதும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், அதைத்தான் கடவுள் பாராட்டுகிறார். இந்த நற்செய்தியைக்கேட்டு மனம்மாற்றம் அடைந்தவர்கள் இரண்டு பெரிய புனிதர்கள். புனித பிரான்சிஸ் அசிசி மற்றும் புனித மார்ட்டின். இரண்டுபேருமே செல்வந்தர்களாக, அதிகாரம் மிகுந்தவர்களாக இருந்தபோதிலும், இயேசுவின் வார்த்தை அவர்களைத்தொட்டு அவர்களின் வாழ்வை மாற்றியது.

கடவுள் நாம் செய்ய முடியாததை நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. நாம் செய்ய முடிகின்றவற்றை மட்டும்தான் எதிர்பார்க்கிறார். அப்படி செய்யக்கூடியவைகளிலும், சிறிய எதிர்பார்ப்புதான், கடவுளுடைய எதிர்பார்ப்பு. அவற்றைக்கூட செய்ய முடியாத தருணத்தில், நமது அழிவுக்கு நாமேதான் பொறுப்பு.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: