அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி இயேசு

தொடக்கத்தில் வாக்கு இருந்தது;அவ்வாக்கு கடவுளோடு இருந்தது;அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.அவரே இயேசுகிறிஸ்து என்னும் பெயரில் இந்த உலகிற்கு ஒளியாக வந்தார்.இருளில் இருக்கும் மனிதர்களை மீட்கும்படி வந்தார்.நாமும் அவரிடம் முழுமனதுடன் நம்பிக்கை கொண்டால் அவருடைய செல்லப்பிள்ளைகளாக இருக்கலாம்.அவருடைய செல்லப்பிள்ளைகளாக மாறுவோமானால் நமக்கு தெரியாமல்,அதாவது நம்மிடம் சொல்லாமல் எதுவும் செய்யமாட்டார்.அதை நாம் வாசிக்கலாம்.தம் ஊழியர்களாகிய அதாவது அவரின் பிள்ளைகளாகிய நமக்கு தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல் ஆண்டவர் எதுவும் செய்வதில்லை.என்று ஆமோஸ் 3:7 ல் படிக்கிறோம்.அப்படி என்றால் இந்த வசனத்துக்கு என்ன அர்த்தம் என்று யோசித்து பார்க்கலாமே!!

ஒருவேளை இதை வாசிக்கும் நீங்கள் நினைக்கலாம் அதில் இறைவாக்கினர்களுக்குத் தம் மறைபொருளை வெளிப்படுத்துவதாக அல்லவா எழுதியிருக்கிறது என்று சொல்லலாம்.நீங்கள் யோவேல் 2 : 28 ஐ வாசித்துப் பாருங்கள்.நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியை பொழிந்தருள்வேன்;உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்;உங்கள் முதியோர் கனவுகளையும்,உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்.உங்கள் பணியாளர் மேலும் பணிப்பெண்கள் மேலும் என் ஆவியை பொழிந்தருள்வேன்,என்று படிக்கிறோம்.அப்படியானால் அதற்கு என்ன அர்த்தம் யோசிக்கவும்.இதோ ஆண்டவரின் நாளில் இதுவெல்லாம் நடக்கும் என்று எழுதியிருக்கிறது.நம் ஒவ்வொருவரையும் ஒளிர்விக்கவே இயேசுகிறிஸ்து இந்த உலகிற்கு வந்து நமக்காக பலப்பாடுகளை பட்டு நம்முடைய வறுமை,வியாதி,கடன்பிரச்சனை,தோல்விகள் பயங்கள் யாவற்றையும் நம்மிடம் இருந்து எடுத்துப்போட்டு அவரைப்போல் நம்மையும் அன்பின் பாதையில்,உண்மையின் பாதையில் நீதியின் பாதையில் நடத்திச் சென்று அவரின் செயல்கள் அனைத்தையும் நமக்கு வெளிப்படுத்தப் போகிறார்.அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் இறைவாக்கு உரைக்க அழைக்கிறார்.

இதே வசனத்தை நாம் திருத்தூதர் பணிகள் 2 : 17 ல் வாசிக்கிறோம். யோவேல் சுமார் கி.மு.835 – 830 ஆகிய வருஷங்களில் இறைவாக்கு உரைத்தது இயேசு மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் சென்றபொழுது அவரின் சீடர்கள் பார்த்துக்கொண்டு இருந்தபொழுது தூய ஆவியானவர் பெந்தக்கோஸ்து நாளில் அவர்கள்மேல் அபிஷேகமாக இறங்கி எல்லோரையும் ஆவியால் நிரப்பி அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து இயேசுவின் திருப்பெயரை சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப் பிழைப்பர் என்று இன்னும் பல இறைவாக்குகளை உரைப்பதாக பார்க்கலாம்.அப்பொழுது அநேகர் சபையில் செர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.மனம் மாறுங்கள்.உங்கள் பாவங்களில் இருந்து மன்னிப்பு பெற்று ஒவ்வொருவரும் இயேசுகிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கு பெறுங்கள்.அப்பொழுது தூய ஆவியை கொடையாக பெறுவீர்கள் என்று வாசிக்கிறோம்.

எனவே தூய ஆவியானவர் கூறுவது இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால் மோசேயின் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் அவரின் அதிசயங்களையும்,அற்புதங்களையும் கண்ணாரக் கண்டும் கிளர்ச்சி செய்து தங்கள் இதயத்தை கடினப்படுத்தியதுபோல நீங்கள் இருக்க வேண்டாம்.அவர்கள் அவ்வாறு தங்கள் இதயத்தை கடினப்படுத்தி சுமார் 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தார்கள்.அவர்கள்மேல் ஆண்டவர் கோபம் கொண்டு அவர்களை அங்கே அழித்துப்போட்டார்.ஆகையால் உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு கடின உள்ளத்தினர் ஆகாதவாறு ஒவ்வொருநாளும் இன்றே என எண்ணி நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை சொல்லுங்கள்.நமது நம்பிக்கையில் இறுதி வரை உறுதியாக நின்று அவரின் பிள்ளைகளாக மாறுவோம்.

ஒவ்வொருநாளும் ஆண்டவருக்கு பயந்து அவரின் கட்டளைகளை கைக்கொண்டு கீழ்படிந்து நடந்து அவர் அளிக்கும் பரலோக நாட்டிற்கு பங்கு உள்ளவர்களாக மாறுவோம்.எல்லோரும் அவரின் தூய ஆவியின் நிறைவால் ஆட்கொள்ளப்பட்டு அவரின் வருகைக்கு ஆயத்தமாகி அவருக்கு எதிர்கொண்டு செல்லும் பிள்ளைகளாக மாறுவோம்.ஆண்டவரின் தயவும்,இரக்கமும்,கிருபையும் நமக்கு உதவி செய்து வழிநடத்த வேண்டுமாக மன்றாடுவோம்.

அன்பின் ஊற்றாகிய இறைவா!!

நீர் மானிடர் யாவர் மேலும் உமது தூய ஆவியை பொழிந்தருள வேண்டுமாக உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.உம்மை அறிகிற அறிவினால் ஒவ்வொருவரையும் நிரப்பும்.கடல் தண்ணீரால் நிரம்பி இருப்பதுபோல தேவரீர் ஆண்டவரே இந்த உலகம் முழுதும் உம்மை அறிகிற அறிவினால் நிரம்பப்பட்டு உம்முடைய ஆட்சியில் பங்குக் கொள்ள உதவி செய்யும்.அவர்கள் இன்னும் உம்மை அறியாதவர்களாக இருக்கிறார்களே,அப்பா நீர் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தி அறிய செய்ததுபோல அவர்களுக்கும் மனம் இரங்கும் உம்மை தவிர வேறு ஒரு கடவுள் இந்த உலகில் இல்லை என்பதை உணர்ந்துக்கொள்ள அவர்களுக்கு உணர்வுள்ள ஆவியை தந்தருளும்.நீர் எங்கள் ஜெபத்தை கேட்பதற்காக உமக்கு நன்றி சொல்கிறோம்.மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம் நல்ல தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: