அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். கலாத்தியர் 5:13

கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்வோர்,அன்பின் வழியாய்ச்செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது. ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். ஏனெனில் உன்மீது நீ அன்புக்கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுதும் நிறைவு பெறுகிறது.கலாத்தியர் 5 : 6,13,14 ல் வாசிக்கிறோம்.

எல்லாவற்றையும் விட சிறந்த நெறி அன்பே, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் இருந்தாலும் இவற்றுள் அன்பே பெரியது,சிறந்தது. அதனால்தான் 1 கொரிந்தியர் 13 : 1,2 ஆகிய வசனங்களில் நாம் இவ்வாறு வாசிக்கலாம். நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைப்பொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும் அறிவெல்லாம் பெற்றிருப்பினும் மலைகளை இடம் பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை.

ஒருவேளை நாம் ஆண்டவருக்கென்று ஊழியம் செய்யலாம்,அல்லது நமது பொருளை பிறருக்கு கொடுத்து உதவலாம், ஆனாலும் அன்பில்லாமல் செய்வோமானால் அதில் பிரயோஜனம் ஒன்றுமில்லை. அன்பு தற்புகழ்ச்சி கொள்ளாது, தன்னலம் நாடாது. மனிதர்கள் நம்முடைய செயல்களை கண்டு பாராட்டலாம். ஆனால் ஆண்டவரோ நம்முடைய இதயத்தின் எண்ணங்களை சீர்தூக்கி பார்க்கிறார். நம்முடைய செயல்கள் எப்படிப்பட்டது என்று அவர் ஆராய்ந்து அறிந்திருக்கிறார். கடைசி நாளில் நம்முடைய செயல்களுக்கேற்ற பலனை அளித்திடுவார். ஆகையால் பிரியமானவர்களே! நாம் உண்மையான அன்பினால் ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்து ஆண்டவரின் கட்டளையையும், அவரின் மன விருப்பத்தையும் நிறைவேற்றி அவருக்கு ஏற்ற வாழ்க்கையை வாழ்ந்து அவரின் அன்பை நிலைநாட்டுவோம்.

அன்பே உருவான இயேசப்பா!

உம்மை போற்றுகிறோம், ஆராதிக்கிறோம். நீர் எங்கள்மேல் வைத்த அன்பினால் இந்த பூமிக்கு வந்து எங்களின் பாவங்களையும், அக்கிரமதத்தையும் உமது தோளில் சுமந்து,எங்களுக்காக நீர் அடிக்கப்பட்டு காயப்பட்டு, சிலுவையில் உமது இரத்தத்தை சிந்தி, அந்த இரத்தத்தை எங்கள்மேல் தெளித்து எங்கள் பாவங்களை மன்னித்து உம்மிடமாக சேர்த்துக்கொண்ட உமது கிருபைக்காக நன்றி சொல்கிறோம். நீர் எங்கள்மேல் வைத்த உமது அளவில்லா அன்பிற்காய் உமது பாதம் பணிகிறோம். நீர் எங்களுக்கு மாதிரியை காண்பித்து கொடுத்திருக்கிறீர். உம்மைப்போல நாங்களும் ஒருவரிலொருவர் அன்புக்கொண்டு நீர் உமது சீடர்களின் கால்களை கழுவியதுபோல நாங்களும் மிகவும் மனத்தாழ்மையோடு நடந்து உமது சித்தத்தை நிறைவேற்ற அருள் தரவேண்டுமாய் கெஞ்சி மன்றாடுகிறோம்,தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: