அன்பின் ஆழத்தை உணர்ந்து செயல்படுவோம்.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் அன்பை நம் இதயத்தில் உணர்ந்து செயலில் காட்டி நன்றியுள்ளவர்களாய் இருப்போம். அன்பைக் குறித்து தீவிரமாக யோசித்துப் பார்ப்போமானால் அதின் செயல்பாடு யாவும் இனிமையாகவே இருக்கும். ஆனால் நாம்தான் அப்பேற்பட்ட  அன்பின் ஆழத்தை உணராமல் கோபம், பொறாமை, சண்டை, வாக்குவாதம் என்று நம்மை கெடுத்துக்கொள்கிறோம். நாம் ஒருவர்மேல் உண்மையான அன்பு வைத்தோமானால் அவர்களை எந்த சூழ்நிலையிலும் வெறுக்கவே மாட்டோம். நம் மனது அவர்களையே சுற்றி சுற்றி வரும். அவர்கள் சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? எப்படி இருக்கிறார்கள்? என்று நம் மனது நினைத்துக்கொண்டே இருக்கும். ஒரு தாய் தன் குழந்தையை இப்படித்தான் நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.

ஆகையால்தான் ஆண்டவரும் ஒரு தாய் தேற்றுவதுப்போல் நான் உங்களை தேற்றுவேன் என்று சொல்கிறார். தாய், பிள்ளை அன்பு மட்டும் அல்ல. அண்ணன், தங்கை, அக்கா, தம்பி நண்பர்களிடம் வைக்கும் அன்பு என்று உறவில் வித்தியாசம் வருமே தவிர அன்பில் எந்த வித்தியாசமும் கிடையாது. கடவுள் நம்மேல் வைத்த அளவில்லாத அன்பினால் தானே தனது உயிரைக் கொடுத்தார். உயிரை கொடுத்ததும் அல்லாமல் தன்னை சிலுவையில் அடித்து துன்புறுத்தியவர்களை மன்னித்து அவர்களுக்காக தமது பிதாவிடம் வேண்டுதலும் செய்கிறார். நாமும் இந்த மாதிரியான அன்பை ஒருவர்மேல் ஒருவர் காட்டினமானால் இந்த உலகத்தில் அமைதியே நிலவும். ஆனால் நாம்தான் அவ்வாறு செயல்படுவதில்லை. சாத்தான் எந்த வகையினாலும் பகையை உண்டு பண்ண கெர்ச்சிக்கிற சிங்கம் போல் காத்திருக்கிறான்.

நம்முடைய சகல எண்ணங்களையும், சகல செய்கைகளையும் நியாந்தீர்க்கும் காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும், துன்மார்க்கனையும், தேவன் நியாந்தீர்ப்பார்.பிரசங்கி 3:17. ஆகையால் நாம் எப்பொழுதும் நமது எண்ணங்களை அன்பினால் நிறைத்துக்கொண்டால் நம்மால் மற்றவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் தீங்கு செய்ய முடியாது. அதற்கு மாறாக அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நமது உள்ளம் விரும்பும். அப்பேற்பட்ட அன்பினால் நாம் நிறைந்து இருக்கும்பொழுது ஆண்டவர் நம் இதயத்தில் வந்து தங்குவார்.

ஆண்டவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே அழகாக செய்திருக்கிறார். உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார். அவர் செய்யும் காரியங்களை மனுஷன் கண்டுபிடியான். ஆகையால் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதும் உயிரோடு இருக்கையில் நன்மை செய்வதுமே அல்லாமல் வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லை.

ஆகையால் நமது உள்ளத்தை அன்பினால் நிறைத்து ஒருவரை தாங்கி ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்து ஆண்டவரின் அன்பிலே நாமும் நடந்து அவரின் பிள்ளைகள் என்று நிரூபிப்போம். தாவீது ஆண்டவரின் அன்பை ருசித்து பாருங்கள் என்று சொன்னதுபோல நாமும் அவரின் அன்பை ருசித்து பார்ப்போம். எதையும் சாப்பிட்டு பார்த்தால்தானே அதின் உண்மையான சுவையை உணர முடியும். அதுபோல் தான் ஆண்டவரின் அன்பை உணர்ந்து நன்றியோடு செயல்படுவோம்.

ஜெபம்

அன்பே உருவான இறைவா! உம்மைப்போல் எங்களையும் மாற்றும். உம்மைப்போல் செயல்பட உம்மைப்போல் அன்புக்காட்ட, உம்மைப் போல் மனதுருக்கம்,கொள்ள உதவி செய்யும். உமது அன்பை நன்கு உணர்ந்து செயல்படவும், நன்றியோடு நடந்துக்கொள்ளவும் கற்றுத்தாரும். யாரையும் பழிக்குப்பழி வாங்காமல் அவர்களை வெறுக்காமல் அவர்கள்மேல் அன்புக்காட்ட உமது கிருபையை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்கள் பாவங்களை நீர் மன்னித்ததுபோல நாங்களும் மற்றவர்களுக்கு மன்னிக்க உதவி செய்யும். ஆண்டவரே! எங்கள் ஆத்துமாவின் வழக்கை நீரே நடத்தி, எங்கள் உயிரை மீட்டுக்கொண்டீர். எங்கள் வழக்கில் உமது சித்தமே நிறைவேறட்டும். உமக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க மனமிரங்கும். எங்கள் தேவனாம், மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாத்தில் வேண்டுகிறோம், எங்கள் ஜீவனுள்ள தந்தையே.ஆமென்!! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: