அன்பும்,அமைதியும்,அளிக்கும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்  இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நாம் ஆண்டவருக்கு பிரியமானவர்களாய் இருக்கிறோமா என்று நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்து அவருக்கு பிரியமாய் வாழ்ந்தோமானால் அவர் நம்மேல் வைத்த அன்பு இன்னது என்று விளங்கும். அன்பே உருவான கடவுள் நம் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்தார்.நாம் சந்தோசமாக, சமாதானமாக, அமைதியுடன் வாழ வேண்டுமாய் அவர் தம் உயிரையே நமக்காக கொடுத்தார். நம்முடைய அறிவுக்கெட்டாத அந்த அன்பை நாமும் அறிந்தோமானால் அதின் மகிமை நமக்கு நன்கு விளங்கும்.இதை வாசிக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் அன்பை அறிந்துக்கொள்ளும் வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பூரணத்தினாலும நிறையப்படவும், கடவுளின் மகிமையின்படி அவரின் அன்பின் மகத்துவத்தை அறிந்து செயல்பட்டால் எவ்வளவு நலமாயிருக்கும். அப்பொழுது நம் தேவன் நமக்கு அன்பையும்,அமைதியும் அளித்து நம்மோடு இருந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. அதனால் தான் மறைநூல் அன்பு திருச்சட்டத்தின் நிறைவு என்று கூறுகிறது. நாம் ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு கொண்டால் அந்த அன்பு அவர்கள் செய்யும் எந்த தீங்கையும் கவனிக்காது.மன்னிக்கும் தன்மை நம்மில் செயல்படும். அதனால்தான் நம் இயேசுவும் அவரை சிலுவையில் அடித்தவர்களை சபிக்காமல் அவர்கள்மேல் உண்மையான அன்புடன் தமது விண்ணக தந்தையை நோக்கி தந்தையே இவர்களுக்கு மன்னியும் என்று சொல்கிறார். ஏனெனில் அன்புக்கு அத்தனை வல்லமை உண்டு.கடவுளின் அன்பை கொண்டுள்ள யாராயிருந்தாலும் பழிவாங்கும் எண்ணம் வரவே வராது. இன்றைய செய்திகளில் நிறையப்பேர் தான் அன்பு செய்த ஒரு நபர் கிடைக்காத பட்சத்தில் அவர்களை பழிவாங்கும் பொருட்டு என்னென்னமோ செய்கிறார்கள்.இதற்கு பேர் அன்பே இல்லை. அன்பு ஒருக்காலும் பழிவாங்காது. அவர்கள் தீமையை செய்தாலும் மன்னிக்கும் தன்மையை கொண்டது. அது அமைதியை கொடுக்குமே தவிர தீயது நாடாது.

அன்பான வாலிப சகோதர,சகோதரிகளே,நீங்கள் ஒருவேளை இந்த தகாத சூழ்னிலையில் சிக்கி இருப்பீர்களானால் ஆண்டவரிடம் வாருங்கள்.அவரே உங்களுக்கு நன்மையானதை தர வல்லவராய் இருக்கிறார்.அவர் சித்தப்படி செய்வோமானால் நம்முடைய வாழ்க்கை நிச்சயம் செழிப்பு அடையும். அதைவிட்டு நீங்களே உங்கள் மனதில் தோன்றியவற்றை செய்து உங்கள் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம். தாயின் வயிற்றில் உருவாக்கிய நமது ஆண்டவர் நம்முடைய தேவைகள் யாவையும் அறிந்துள்ளார். அவசரப்பட்டு நீங்களாக ஒரு வாழ்க்கையை தேடிக்கொண்டு கஷ்டப்படாதீர்கள். உங்களுக்கு ஏற்ற காலத்தில் ஏற்ற துணையை ஆண்டவர் கொடுத்து உங்கள் மனவிருப்பங்களை எல்லாம் நிறைவேற்றுவார். அன்பும், அமைதியும் உங்களுக்கு கிடைக்க கருணை பொழிவார்.

ஜெபம்.

அன்பின் பரம தகப்பனே, உமது அன்பு எங்கள் அறிவுக்கு எட்டாத உயரமாய் இருப்பதால் உம்மை ஸ்தோத்தரிக்கிறோம் நீர் இந்த உலகில் வாழ்ந்த காலத்தில் யாவரையும் நேசித்து உதவி செய்தது போல நாங்களும் எல்லோரையும் நேசிக்கும் நல்ல குணத்தை தந்தருளும். இந்த தவக்காலத்தில் நாங்கள் யாவரும் நீர் விரும்பும் காரியத்தை செய்து உமக்கே மகிமை செலுத்த உதவி செய்யும். உண்மையான அன்போடு எங்கள் அடுத்திருப்பவரை நேசித்து உமது திருச்சட்டத்தை நிறைவேற்ற உதவி செய்யும். உம்மைப்போல வாழ்ந்து உமக்கே மகிமையும், புகழையும்,சேர்க்க போதித்து வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நல்ல நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் பரம தந்தையே!ஆமென்!!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: