அன்பே அனைத்திற்கும் ஆணி வேர்

கிறிஸ்தவத்தின் ஆணிவேராக, அடித்தளமாக இருப்பது நிச்சயம் அன்பு ஒன்று தான். அன்பே கடவுள். கடவுள் அன்பின் வடிவமாக இருக்கிறார். கடவுள் மனிதனைப்படைத்தது அன்பின் வெளிப்பாடுதான். இயேசு இந்த உலகத்திற்கு வந்ததும் அன்பின் அடையாளம் தான். இந்த உலகத்திலே தேவையில் இருக்கிற மனிதர்கள் அனைவரும் இயேசுவை நாடி வந்தபோது, அவர்களுக்கு உதவி செய்ததும், இந்த அன்பின் அடிப்படையில் தான். ஆக, அன்பே கிறிஸ்தவத்தின் அடித்தளம்.

இரக்கம், மன்னிப்பு, ஈகைகுணம் போன்றவையெல்லாம், அன்பின் ஆணிவேரிலிருந்து படரக்கூடியவை. இன்றைய நற்செய்தியில் அன்பின் ஆணி வேரிலிருந்து புறப்படக்கூடிய மற்றவர்களுக்கு இரங்குகிற குணத்தின் முக்கியத்துவத்தை இயேசு வலியுறுத்துகிறார். கடவுள் நம்மைப்பார்த்து ”நன்று, நன்று நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனே” என்று சொல்வதற்கு நாம் மிகப்பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதல்ல. மாறாக, சிறிய, சிறிய காரியங்களை நேர்த்தியாகச் செய்தாலே, நாம் சிறப்பைப் பெற்றுவிடலாம். மற்றவர்களுக்கு உதவுவது என்பது இதனுடைய சிறப்பாக இருக்கிறது. உதவி செய்வதற்கு நாம் எல்கை ஒன்றும் வைக்கத் தேவையில்லை. உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே, நாமாக மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்துவிடுவோம். நம்மால் எந்த அளவுக்கு மற்றவர்களுக்கு, எந்த வழிகளிளெல்லாம் உதவி செய்ய முடியுமோ, அந்த வழிகளில் எல்லாம் உதவி செய்வதற்கு, இந்த வாசகம் அழைப்புவிடுக்கிறது.

ஒவ்வொரு நாளும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னதாக, நாம் நம்மையே கேட்டு பார்க்க வேண்டிய கேள்வி: இன்று நான் ஒருவரையாவது அன்பு செய்தேனா? என்னால் இயன்ற உதவியை யாருக்காவது செய்தேனா? அன்பு செய்வதையே முதன்மை இலக்காக கொண்டு, எனது வாழ்வை வாழ்ந்தேனா? சிந்திப்போம். செயல்படுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: