அன்பை குறைக்காதீர்கள்.. அள்ளி கொடுங்கள்

மாற்கு 12:28-34

இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 31ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

ஒரு ஊரில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ‘ உள்ளே வரலாமா ‘ என்று கேட்டனர். தந்தை ‘வாருங்கள்’ என்றார். ‘நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது…யாராவது ஒருவர் தான் வரமுடியும்…என் பெயர் பணம்…இவர் பெயர் வெற்றி…இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் வரமுடியும்…எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்’ என்றார் பணம் எனப்படுபவர்.

குமரனின் தந்தை ‘ வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்’ என்றார். ஆனால் குமரனோ …’அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்…நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்…எல்லாவற்றையும்..வெற்றி.. உட்பட …அனைத்தையும் வாங்கலாம்’ என்றான். ஆனால் குமரனின் தாயோ ‘வேண்டாம்…அன்பையே அழைக்கலாம். அன்பு தான் முக்கியம்’ என்றாள்.

பின் மூவரும், “அன்பு உள்ளே வரட்டும்” என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் உள்ளே நுழைந்தனர். குமரனின் அம்மா ‘அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்’ என்றார். அன்பு சொன்னார்,’ நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம். ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்.. நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்’

ஆம் அன்புமிக்கவர்களே! அன்பு மட்டும் நமக்கு இருந்தால் போதும்.. நம் வாழ்வில் வெற்றியும், தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும். பொதுக்காலம் 31ம் ஞாயிறு நம்முடைய முழுமையான அன்பை வெளிப்படுத்த சொல்கிறது. அன்பை குறைக்காமல் அள்ளி அள்ளி பொழியச் சொல்கிறது. வாருங்கள் அன்பின் மாந்தர்களாய் வாழ்வோம். மூன்று விதங்களில் நம் முழுமையான அன்பை வாரி வழங்குவோம்.

1. முழு இதயத்தோடு அன்பு
புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக நெருங்கிய சீடராகவும் மிக முக்கியமான பெண் சீடராகவும் விவரிக்கப்படுகிறவர் மகதலா மரியாள். மகதலின் மரியா இயேசுவின் கடைசி நாட்களில் – பாடுகள்பட்டு, மரித்து, உயிர்தெழும்வரை கூடவே இருந்தார்; அவரைக் சிலுவையில் அறைந்தபோது, அன்பிற்குரிய யோவானைத் தவிர பிற ஆண் சீடர்கள் ஓடியபோது அருகில் இருந்தவர் இவர், பின்னர் கல்லறையிலும் உடனிருந்தார். இவர் இயேசுவைப் பின்சென்று அவருக்கு சேவை செய்து வந்தார். இயேசு தனக்குச் செய்த உதவிகளுக்கு நன்றியாக, இவர் தனது உடமைகளைப் பயன்படுத்தி, அவருக்குச் சேவை செய்தார். சாகும்வரை அவருக்குப் பிரமாணிக்கமாய் இருந்தார்.

“என்னை இப்படி பற்றிக்கொள்ளாதே” என்று ஆண்டவரே கூறும் அளவுக்கு, அவர் மேல் அன்புகொண்டவர். இயேசுவைப் பற்றிக் கொள்வதில் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் அன்றிலிருந்து இன்றுவரை திகழ்கிறார். நற்செய்தியாளர் யோவான் மற்றும் மாற்கு ஆகிய இருவர் கூற்றுப்படி, இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, முதலில் அவரைக் கண்டதும் மகதலா மரியே.

உயிர்த்த இயேசுவைக் காணும்வரை இவர் இளைப்பாறவில்லை. “அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள்? நான் அவரைத் தூக்கிக் கொண்டு செல்வேன்” என்றார். அவரைத் தூக்கிச் செல்ல இவரால் முடியாதென்றாலும், இச்சொற்கள் இவளது அன்பைக் காட்டுகின்றன. சாதாரண அன்பு அல்ல, மாறாக முழுமையான அன்பு. முழு இதயத்தோடு அவர் இயேசுவை அன்பு செய்ததைக் காட்டுகின்றது.

அன்புமிக்கவர்களே! மகதலா மரியா இயேசுவை அன்பு செய்தது போல நாம் ஆண்டவரை அன்பு செய்வோம். இறுக்கமாய் பற்றிக்கொள்வோம். அரைகுறையான அன்பிலிருந்து முழு அன்போடு ஆண்டவரை அணுகுவோம். நம் இதயம் முழுவதும் அவர் நிறைந்திருக்கட்டும்.

2. முழு மனத்தோடு அன்பு
ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான், அவள்மீது அளவுகடந்த பாசத்தையும் காட்டினான். இவ்வாறிருக்க ஒரு நாள் அவள் ஒரு தோல்நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு படிப்படியாக குறைவடையத் தொடங்கியது. அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை மேற்கொண்டிருந்தான். அவன் திரும்பி வரும்போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்திருந்தான். ஆனால் எவ்வித பிரச்சினையும் இன்றி அவர்களது மணவாழ்வு தொடர்ந்தது.

நாட்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிடையே இருந்த அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர். அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறுதான் இருந்தாள்.

அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள். அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது. தன் அன்பு மனைவியின் இறுதிச் சடங்கை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான். அவன் திரும்பி வரும்போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்து “எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்?” இது வரைக்கும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்?” எனக் கேட்டான்.அதற்கு அவன், “நான் குருடன் இல்லை. எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக்கூடும் என்பதால்தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன். அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன். அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்” எனப் பதிலளித்தான்.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் அடுத்தவரிடம் இருக்கும் குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை என்பதற்கு இந்த நிகழ்வு சான்று. முழுமையான அன்பு குறைகளை பார்ப்பதில்லை. நாம் வாழும் இடத்தில் பலரை ஒதுக்குகிறோம். காரணம் என்ன? நம்மிடத்தில் முழுமையான அன்பு இல்லை. அருகிலிருக்கும் அனைவரையும் முழுமையாக அன்பு செய்வோம். பிறகு வாய்ப்பு கிடைப்பதில்லை. வாய்ப்பிருக்கும் போதே முழு மனத்தோடு அனைவரையும் அன்பு செய்வோம்.

3. முழு அறிவோடு அன்பு
இறந்த மனிதன் தான் செல்லமாக அன்பு செய்த நாயையும் அழைத்துக் கொண்டு மேலே மோட்சத்திற்கு சென்றான். ஒரு சாலையின் வழியாக சென்றான். அந்தச் சாலை எங்கு போகிறதோ எனச் சிந்தித்தான்.

கொஞ்ச தூரம் சென்றதும் சாலையின் ஒரு பக்கத்தில் உயரமான சலவைகல்லாலான மதிற்சுவரைக் கண்டான்.

சிறிது தூரத்தில் மலை மேல் அந்த மதிற்சுவரில் அழகிய நுழைவாயில் ஒன்றைக் கண்டான். அருகில் சென்று பார்த்தபோது, அந்த வாயிலின் கதவில் ரத்தினக் கற்கள் பதிக்கப் பட்டிருப்பதையும், அந்த வாயிலை நோக்கிச் செல்லும் பாதை தங்கத்தால் போடப்பட்டிருப்பதையும் கண்டான். அந்த வாயிலை நோக்கித் தன் நாயுடன் நடக்க ஆரம்பித்தான். அருகில் செல்லும்போது அந்த வாயிலின் உள்ளே ஒரு மனிதன் தங்க மேசையின் முன் அமர்ந்திருப்பதைக் கண்டான். அருகில் சென்ற அவன் அந்த மனிதனிடம் கேட்டான்” இந்த இடத்தின் பெயர் என்ன?” அந்த மனிதன் சொன்னான்” சொர்க்கம்” அவன் கேட்டான்” குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?”

“நிச்சயமாக! உள்ளே வாருங்கள் குளிர்ந்த நீர் வரவழைக்கிறேன்”சொல்லியவாறே அவன் கதவைத் திறக்கலானான்!

வழிப்போக்கன் தன் நாயைக் காட்டிக் கேட்டான்”என் நண்பனும் என்னோடு வரலாம் அல்லவா?” “மன்னிக்கவும்! நாய்களுக்கு இங்கு அனுமதி இல்லை” வழிப்போக்கன் யோசித்தான். பின் தன் வந்த பாதையில் சாலையை நோக்கி நாயுடன் நடக்க ஆரம்பித்தான்.

நீண்ட தூரம் நடந்தபின் மற்றொரு வாயிலைக் கண்டான். துருப்பிடித்த கதவு. அதை நோக்கி ஒரு மண்பாதை சென்று கொண்டிருந்தது.

அந்த வாயிலை அவன் நெருங்கியதும் ஒரு மனிதன் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

அவனிடம் கேட்டான்”குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?”
“உள்ளே ஒரு குழாய் இருக்கிறது, வாருங்கள்”
“நாயைக் காட்டிக் கேட்டான் “என் தோழனுக்கும் நீர் வேண்டும்”
அந்த மனிதன் சொன்னான் “குழாயடியில் ஒரு குவளை இருக்கிறது. எடுத்துக் கொள்ளலாம்” அவன் உள்ளே சென்றான். குழாயையும் குவளையையும் கண்டான்.தண்ணீர் எடுத்து நாய்க்கும் கொடுத்துத் தானும் அருந்தினான்.

தாகம் தீர்ந்தது. மரத்தடி மனிதனை அணுகிக் கேட்டான்” இந்த இடத்தின் பெயர் என்ன?” அவன் சொன்னான் “சொர்க்கம் என்றழைக்கப்படுகிறது”
வழிப் போக்கன் திகைத்தான், “குழப்பமாயிருக்கிறதே! நான் வரும் வழியில் ஒருவர் வேறு இடத்தையும் சொர்க்கம் என்று சொன்னாரே!”
ஓ! இந்த ரத்தினக்கல் பதித்த கதவுள்ள இடத்தைச் சொல்கிறீர்களா?
அது—நரகம்!!”

“அப்படியென்றால் சொர்க்கம் என்று அவர்கள் சொல்லி அவர்கள் ஏமாற்றுவது உங்களுக்கு எரிச்சலாக இல்லையா?” “இல்லை .மாறாக மகிழ்ச்சியடைகிறோம். அந்த இடத்தை கடந்து வரும் நண்பர்களை நாங்கள் கண்டுபிடிக்கிறோம். உண்மையான அன்பு கொண்டவா்கள் மட்டுமே அந்த இடத்தை கடந்து இங்கு வர முடியும். ஆகவே அந்த இடம் முழு அன்பிற்கான தேர்வு மையம். அங்கு வெற்றி பெற்றால் தான் இங்க நிலைவாழ்வு கிடைக்கும் என்றார்.

அன்புமிக்கவர்களே! மனிதர்களைத் தாண்டி நாம் உயிர்களையும் நம் முழு அறிவோடு அன்பு செய்ய வேண்டும். தாவரங்கள், பறவைகள், விலங்குகள் இவற்றை நம் முழு அறிவோடு அன்பு செய்ய வேண்டும். வீட்டில் தோட்டம் அமைக்க வேண்டும். பறவைகளை வீட்டில் வைத்து நேசிக்க வேண்டும். விலங்குகளை நம் அன்பால் மகிழ்விக்க வேண்டும். அவைகளை நம் முழுஅறிவோடு அன்பு செய்ய வேண்டும்.

மனதில் கேட்க…
1. என் வாழ்கையில் நான் வெறுத்ததை எல்லாம் என் அன்பால் திரும்ப பெற்றுக்கொள்ளலாமா?
2. அன்பில் குறை வைக்காமல் முழுமையான அன்பை பொழிய ஆசையாய் நான் செயல்படுவேனா?

மனதில் பதிக்க
உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக (மாற் 12:30)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: