அர்ப்பணத்தின் நிறைவாக வாழ்ந்த செக்கரியா

குற்றமற்றவர்களின் வாழ்வில் எதற்காக சோதனை? ஒழுக்கத்தோடு, ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டு வாழக்கூடியவர்களுக்கு எதற்காக கடினமான தருணங்கள்? இதுபோன்ற கேள்விகள் நாம் நேர்மையாக வாழ்கிறபோது, நமது உள்ளத்தில் எழக்கூடியவை. இந்த சோதனைகள் நமக்கு மட்டும்தானா? இல்லை. நம்மைப்போன்று வாழக்கூடிய எண்ணற்ற மனிதர்களுக்கும் நடந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதர் தான் இன்றைய நற்செய்தியில் நாம் காணும் செக்கரியா.

செக்கரியா கடவுள் முன்னிலையில் குற்றமற்றவராய் வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர். ஒழுங்களுக்கு ஏற்ப தனது வாழ்வை அமைத்துக்கொண்டவர். அப்படிப்பட்டவருக்கு குழந்தை இல்லை. எத்தனை ஆண்டுகள் நம்பிக்கையோடு வாழ்ந்திருப்பார். அந்த நம்பிக்கை வீண்போய் விட்டது. இருவரும் குழந்தை பெறக்கூடிய வயதை தாண்டியிருந்தார்கள். ஆனாலும், செக்கரியா கடவுள் முன் பணி செய்வதை பாக்கியமாக எண்ணி, தொடர்ந்து அர்ப்பண உணர்வோடு தன் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார். செக்கரியாவின் பொறுமை நமக்கு வியப்பைக் கொடுத்தாலும், கடவுளின் வல்லமை வெளிப்படுதவற்கு கூட, இப்படிப்பட்ட தருணங்கள் தேவையிருக்கிறது என்பதுதான் இங்கே புலப்படுகிறது. ஆக, நமக்கு நேர்ந்திருக்கிற துன்பங்கள் ஒருவேளை கடவுளின் வல்லமை வெளிப்படக்கூட வாய்ப்பிருக்கக்கூடிய ஒரு துன்பமாக இருக்கலாம்.

செக்கரியாவன் வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரக்கூடிய செய்தி ஒன்றே ஒன்று தான். எந்த நிலையிலும் நாம் கடவுளிடம் நம்பிக்கை இழக்கக்கூடாது. எது நடந்தாலும் அவரின் பெயர் போற்றப்படக்கூடிய வகையில் நாம் நமது வாழ்வை வாழ வேண்டும். அத்தகைய வாழ்வு நமதாகட்டும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: