அர்ப்பண வாழ்வு

மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவைப்பார்த்து “போதகரே” என்று சொல்வது சற்று வியப்பாக இருக்கிறது. ஏனென்றால், போதகர் என்பது மதிப்பு மிகுந்த சொல். மறைநூல் அறிஞர்கள் இயேசுவைப் போதகராக ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியிருக்கின்ற சூழ்நிலையில், இயேசுவைப் போதகர் என்று அழைப்பது வியப்புக்குரியது. இயேசு தனது பணிவாழ்வின் யதார்த்தத்தை, உண்மை நிலையை எடுத்துரைப்பதாக இந்தப்பகுதி அமைகிறது.

இயேசு தன்னுடைய சீடர்கள் உணர்வுப்பூர்வமாக உந்தப்பட்டு தன்னோடு இருக்க வேண்டும் என விரும்பவில்லை. உணர்வு என்பது உடனே தோன்றி உடனே மறையக்கூடியது. தான் என்ன செய்கிறோம்? அர்ப்பண வாழ்வு என்றால் உண்மையான அர்த்தம் என்ன? என்பதை தன்னுடைய சீடர்கள் உணர்ந்திருக்க வேண்டும் என இயேசு எதிர்பார்க்கிறார். அர்ப்பண வாழ்வு என்பது மற்றவருக்காக வாழ்வது, எந்த துன்பத்தையும் ஏற்றுக்கொள்வத, தங்களையே தியாகம் செய்வது, மற்றவருக்கான சிலுவையை நாம் சுமப்பது. இதை தன்னுடைய சீடர்கள் நன்றாகப்புரிந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இயேசு இதைச்சொல்கிறார்.

கிறிஸ்தவ வாழ்வு என்பது ஏதோ ஞாயிறு திருப்பலிக்கு கலந்து கொண்டுவிட்டு, நாம் நினைத்ததை செய்யக்கூடிய வாழ்வு அல்ல. அது ஓர் அர்ப்பண வாழ்வு. கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்க முனைகின்ற சவாலான வாழ்வு. கிறிஸ்தவனாக வாழ முற்படுவதற்கு முன் நாம் வாழப்போகும் இந்த வாழ்வு நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதையே கிறிஸ்து நமக்கு கற்றுத்தருகிறார்.

– அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: