அறிவு, ஆர்வம், திறந்த மனம்

“அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கான விடைக்குத் தனது சொந்த விளக்கத்தையும் அளித்த மறைநூல் அறிஞர் ஒருவரை இயேசு “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” எனப் பாராட்டும் நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம்.

இந்தப் பாராட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்:

  1. மறைநூல் அறிஞரின் அறிவுத் திறனை இயேசு பாராட்டுகிறார். அறிவாற்றல் இறைவனைப் பற்றி அறிவதில், வாழ்வின் மதிப்பீடுகளை தெரிந்துகொள்வதில் செலவழிக்கப்படுவது பாராட்டுக்குரியது. மாறாக, இறைவனை மறுப்பதற்கோ, இறையாட்சி மதிப்பீடுகளைச் சிதைப்பதற்கோ பயன்படுத்தப்படும் அறிவு அழிவுக்குரியது.
  2. அறிவாற்றல் மிக்க மறைநூல் அறிஞரின் ஆர்வம் இங்கே பாராட்டப்படுகிறது. அந்த ஆர்வத்தின் காரணமாகத்தான், இயேசு “சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு” தாமும் கேள்வி கேட்க முன்வந்தார். “அணுகி வந்தார்” என்னும் சொல்லாடல் கவனத்திற்குரியது. ஆர்வம் இருந்தால் அணுகிவரவேண்டும்.
  3. மறைநூல் அறிஞரின் திறந்த மனதை இயேசு பாராட்டினார். அறிவும், ஆர்வமும் மிக்க பலரும் இறையாட்சியை நெருங்கிவருவதில்லை. காரணம், அவர்களிடம் திறந்த மனம் இல்லை. ஆனால், இயேசு சொன்ன விளக்கத்தை ஏற்று, “இறையன்பும், பிறரன்பும் பலிகளைவிட மேலானது” என்று கண்டுணர்ந்த உண்மையை அறிக்கையிடுகிறார் இந்த அறிஞர்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இறையாட்சியின் மதிப்பீடுகளைக் கண்டுணரவும், இறையாட்சியை நெருங்கி வரவும், எங்களுக்கு அறிவும், ஆர்வமும், திறந்த மனமும் தந்தருள்வீராக. உமது தூய ஆவியால் எம்மை நிரப்புவீராக. ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: