‘அக்கைம்பெண்ணைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, ‘அழாதீர்’ என்றார்” (லூக்கா 7:17)

உலகத்தில் மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்கள் கணக்கிலடங்கா. பசியும் பட்டினியும், வறுமையும் ஏழ்மையும், நோயும் நோக்காடும், வீடின்மையும் கல்வியறிவின்மையும் என்று மனிதரை வாட்டி வதைக்கின்ற இழிநிலைகள் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் பாரெங்கும் பரவியிருப்பது கவலையானதே. எத்தனையோ தேவைகள் இருக்கின்ற போது நம்மை அடுத்திருக்கின்ற மனிதரின் வேதனைகளை நாம் கண்டுகொள்ளாமல் போகின்ற ஆபத்து உள்ளது. உதவி கேட்டுப் பலர் வரும்போது நம் அருகிலிருப்பவருக்கு உதவி தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடும். இயேசுவிடம் உதவி கேட்டு எத்தனையோ மனிதர் வந்தனர். கும்பல் கும்பலாக அவரைத் தேடிச் சென்றனர். தம்மை நெருக்கிய கூட்டத்தின் நடுவிலும் இயேசு ஓர் எளிய கைம்பெண்ணின் வேதனையைக் கவனிக்கத் தவறவில்லை. அப்பெண்ணின் ஒரே மகன் இறந்துவிட்டிருந்தார். கணவனும் இல்லை, மக்களும் இல்லை என்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்ட அப்பெண்ணைக் கண்டு இயேசு இரக்கம் கொள்கிறார். அவருடைய மகனுக்கு உயிர் அளிக்கிறார். இச்செயல் வழியாக இயேசுவின் வல்லமை விளங்கியது ஒருபுறமிருக்க, அவருடைய இரக்க மனப்பான்மையும் இளகிய மனதும் இங்கே தோன்றுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.

எத்தனையோ அலுவல்கள் நமக்கு இருந்தாலும் நம்மை அடுத்திருக்கின்ற ஒருவருடைய தேவையை உணர்ந்து அவருக்கு உதவிசெய்ய நாம் நேரம் ஒதுக்க வேண்டும். பல அலுவல்களில் ஈடுபட்டு சுறுசுறுப்பாக உழைப்பவர்களுக்கு மேன்மேலும் பொறுப்புக்கள் வந்து சேரும் என்பது அனுபவ உண்மை. அந்த வேளைகளிலும் பிறருடைய தேவைகளைக் கண்டு, அவர்கள் நம்மை அணுகுவதற்கு முன்னரே உதவி செய்ய முன்வருவது இயேசுவின் சீடருக்கு அழகு. தம் ஒரே மகனை இழந்த கைம்பெண் இயேசுவிடம் உதவி கேட்டுக் கைநீட்டவில்லை; ஆனாலும் இயேசு அவருடைய தேவையைத் தாமாகவே உணர்ந்து அவருக்கு உதவிசெய்ய முன்வந்தார். வள்ளுவரும் நட்புப் பற்றிப் பேசும் போது ”உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்று போற்றியுரைப்பார் (குறள் 788). நட்பையும் விஞ்சிச் செல்வது இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற அன்பு. கடவுளின் பண்பே அன்புதானே!

மன்றாட்டு
இறைவா, குறிப்பறிந்து உதவி செய்ய எங்களுக்கு நன்மனதைத் தந்தருளும்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.