அழைத்தலும், அறிவிப்பும் !

இன்று நற்செய்தியாளரும், திருத்தூதருமான புனித மத்தேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம். அவருடைய அழைப்பையும், நற்செய்தி அறிவிப்பையும் இன்று நினைவுகூர்ந்து அவருக்காக இறைவனைப் போற்றுவோம். மத்தேயு சுங்கச் சாவடியில் வரி தண்டுபவராகப் பணியாற்றியவர். எனவே, பாவி என்று கருதப்பட்டவர். இருப்பினும், அவரையும் இயேசு தம் சீடருள் ஒருவராக அன்புடன் தேர்ந்துகொண்டார். நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்று அறிக்கையிட்டார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட மத்தேயு, அழைப்பிற்குத் தகுதியுள்ளவராக வாழ்ந்தார். நற்செய்தியை வார்த்தையாலும், எழுத்தாலும் அறிவித்தார். இன்றும் அவர் எழுதிய நற்செய்தி நமக்கெல்லாம் ஊக்க மருந்தாகத் திகழ்கிறது.

நமது அழைப்பும், அறிவிப்பும் பற்றிச் சிந்திப்போம். நாம் பாவிகளாய் இருந்தபோதே நம்மை அழைத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். அழைப்பை ஏற்று நற்செய்தியாளர்களாய் வாழ்வோம். நமது வாழ்வே ஒரு நடமாடும் நற்செய்தி நூலாக அமையட்டும். நம்மையும், நமது பணியையும் பார்க்கிறவர்கள் இயேசுவின் மதிப்பீடுகளை நம்மிடமிருந்து கற்றுக்கொள்ளட்டும். இது நம்மேல் சுமத்தப்பட்ட கடமை என்று ஏற்றுக்கொள்வோமா?

மன்றாடுவோம்: நற்செய்தியின் நாயகனே இறைவா, சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த மத்தேயுவை நீர் அழைத்ததுபோலவே, தகுதியற்ற என்னையும் உமது சீடனாக அழைத்ததற்காக நன்றி கூறுகிறேன். ஆண்டவரே, என் வாழ்வையும், பணியையும் ஆசிர்வதியும். அதனால், பிறர் நற்செய்தி மதிப்பீடுகளை என்னிடமிருந்து கற்றுக்கொள்வார்களாக. இதனால், நீர் மாட்சிமை அடைவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: