அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்

திருப்பாடல் 89: 1 – 2, 3 – 4, 26 – 28
”அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்”

பொதுவாக, திருப்பாடல்கள் வேண்டுதல்களோடும், விண்ணப்பங்களோடும் தொடங்கும். இறுதியில் கடவுள் புகழ்ச்சியோடு முடிவடையும். ஆனால், இந்த திருப்பாடல் சற்று வித்தியாசமானது. புகழ்ச்சியோடு தொடங்குகிறது. வேண்டுதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவடைகிறது. தாவீதோடு கடவுள் கொண்டிருந்த உடன்படிக்கையை இது நினைவுபடுத்துவதாக அமைகிறது.

கடவுள் தாவீதோடு என்ன உடன்படிக்கையை ஏற்படுத்தினார்? 2சாமுவேல் 7 வது அதிகாரத்தில், கடவுள் தாவீதோடு செய்து கொண்ட உடன்படிக்கைப் பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதில் தாவீதின் வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும் என்கிற வாக்குறுதி வழங்கப்படுகிறது. அந்த உடன்படிக்கையைக் கேட்டவுடன் நிச்சயம் தாவீது கடவுளின் அன்பை எண்ணி உள்ளம் மகிழ்ந்திருப்பார். ஏனென்றால், கடவுள் தாவீதை உயர்வான இடத்தில் வைத்திருந்தார். ஆடு மேய்க்கிற சாதாரண இடையனை, இஸ்ரயேல் மக்களை வழிநடத்தக்கூடிய அளவுக்கு உயர்த்தியிருந்தார். ஆனால், தாவீதோ அந்த நன்றியுணர்வு இல்லாமல், தவறு செய்தான். கடவுளுக்கு எதிராக பாவம் செய்தான். ஆனாலும், கடவுள் அவன் செய்த பாவங்களையெல்லாம் மன்னித்து, அவனுக்கு இன்னும் மிகப்பெரிய பாக்கியத்தை வழங்கியதை எண்ணிப்பார்த்து, தாவீது மகிழ்ச்சியடைகிறார்.

கடவுளிடத்தில் உண்மையான மனநிலையோடு, திறந்த உள்ளத்தோடு நமது பாவங்களை அறிக்கையிட்டு, தாவீதைப்போல மன்றாடுகிறபோது, கடவுளின் மன்னிப்பை நிறைவாகப் பெற்றுக்கொள்கிறோம். அந்த உண்மையான மனமாற்றத்தை, மனநிலையை ஆண்டவர் பாவியிடமிருந்து எதிர்பார்க்கிறார். அப்படிப்பட்ட இதயத்தை நாமும், ஆண்டவரிடத்தில் கேட்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: