அவனும் மனிதன்

லூக் 16 : 19 – 31

அனைத்து செல்வங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தவரின் பெயரானது குறிப்பிடப்படவில்லை (காண்க – தி.வெ- 20:15) ஆனால் அடுத்த நேரம் உணவுக்கே வழியில்லாதவனின் பெயரானது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணக்காரன் நரகத்திற்கும், ஏழை இலாசர் விண்ணகத்திற்கும் சென்றார்கள். இது அவர்களின் பொருளாதார நிலையின் அடிப்படையிலா? அப்படியென்றால் நம்முடன் வாழும் எந்தப் பணக்காரர்களும் விண்ணகத்திற்கு வரமாட்டார்களா? எல்லா ஏழைகளுக்கும் விண்ணகத்தில் இடமுண்டா? இல்லை. மாறாக, இருவரின் செயல்களையும் மனநிலையையும் பொறுத்தே தீர்ப்பிடப்படுகிறார்கள். பணக்காரன் கண்முன்னேயிருக்கும் இலாசரிடம் மிருகத் தன்மையோடு நடக்கிறான். இலாசரோ தன் அருகேயிருந்த மிருகத்திடம் கூட மனிதத் தன்மையோடு நடந்து கொள்கிறான்.

ஒரு பணக்காரன் – ஓர் ஏழை, இது உவமையிலே! சில பணக்காரர்கள் – பல ஏழைகள் இது நமது வாழ்க்கையிலே! அறுசுவை உண்டி அமர்க்கள கொண்டாட்டங்கள் இது ஒரு பக்கம். ஒருவேளை உண்ண உணவின்றி, ஒண்ட இடமின்றி, உடுத்தி மூட உடையின்றி ஒருவன் மற்றவனைக் கடவுளாகப் பார்க்க முடியாத போதாமை, பேதைமையே! இன்று நம் பங்கிலும், பணிசெய்கின்ற இடங்களிலும், படிக்கின்ற இடங்களிலும் எத்தனை எத்தனை இலாசர்கள் அலைகின்றார்கள்? இன்னும் இலவச அரிசியை மட்டும் நம்பி, வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்கள் எத்தனை பேர்? இப்படியெல்லாம் இந்த இலாசர்கள் வீதிகளிலே அலைந்து திரிவதற்கு நாமும் தானே ஒரு விதத்தில் காரணம். நம் வீட்டிற்கு வந்து கேட்டால் மட்டுமே கொடுப்போம் என்பவர்களும் இருக்கிறோம். வீட்டுக்கு வந்து கேட்டால் மட்டும் கொடுத்து விடுவோமோ? என்று எண்ணுபவர்களும் இருக்கலாம்.

இத்தவக்காலத்தில் இப்படிப்பட்ட இலாசர்கள் நம் ஊனக் கண்களையும், உள்ளக் கதவுகளையும் திறக்கட்டும். ஓர் அருமையான பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

“வறுமையில் வாழ்பவன் என் நண்பன்
வருத்தத்தில் இருப்பவன் சகோதரன்
அல்லல் படுபவன் என் நண்பன்
ஆபத்தில் இருப்பவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன்”

உங்களுக்குள் வறியவர்கள் இல்லாதிருக்கட்டும் (இ.ச – 15:4)

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: