ஆண்டவரின் இரக்கம் தீர்ந்து போகவில்லை

ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை. காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீரே பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!” ஆண்டவரே என் பங்கு” என்று என் மனம் சொல்கின்றது! எனவே அவரில் நம்பிக்கை கொள்கிறேன். ஆண்டவரில் நம்பிக்கை வைப்போருக்கும், அவரைத் தேடுவோருக்கும் அவர் நல்லவர்! அவர் அருளும் மீட்டுப்பாக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!அவர் நம்மை வருத்தினாலும் தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார். மனமார அவர் நம்மை வருத்துவதுமில்லை. துன்புறுத்துவதுமில்லை.

துன்பங்களின் வழியாக நாம் கடந்து செல்லும்பொழுது நாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறோம். தங்கம் அக்கினியினால் உருக்கப்பட்டால்தான் புது, புது வடிவத்தில் பலவகையான ஆபரணங்கள் கிடைக்கிறது. நம்முடைய ஆத்துமாவோ அதைவிட மேலானது. அது சோதிக்கப்படும்பொழுது நமக்குள் பொறுமையும், அமைதியும், அன்பும் நிலைத்திருக்க உதவி செய்கிறது. உபத்திரவம் பொறுமையை கற்றுக்கொடுக்கிறது. தி.பாடல்கள் 119:71 ம் வசனம் இதையே சொல்கிறது. எனக்கு துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே: அதனால் உம் விதிமுறைகளைக் கற்றுக்கொண்டேன்.

கடவுள் ஒரு காரியத்தை கட்டளையிடவில்லை என்றால் அவர் சொல்லியதை யாரால் நிறைவேற்றக்கூடும்? நன்மையும் தீமையும் உன்னதரின் வாயினின்றே புறப்படுகிறது. ஆகையால் நாம் முறையிடுவதும், புலம்புவதும் வீணே. நம் வழிகளை ஆய்ந்தறிவோம்! ஆண்டவரிடம் திரும்புவோம். விண்ணக இறைவனை நோக்கி நம் இதயத்தையும், கைகளையும் உயர்த்துவோம். அவருடைய இரக்கத்துக்காக கெஞ்சி மன்றாடுவோம். அவரே நம்மை மன்னித்து நம்முடைய பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் நம்மை விடுவித்து காத்தருள்வார். நாம் அவர் திருப்பெயரை சொல்லி அழைக்கும் பொழுது நம்மேல் இரங்குவார். அவர் இரக்கம் தீர்ந்து போகாது.

ஜெபம்

அன்பின் பரலோக தேவனே! அன்பின் ஊற்றே! நீரே உன்னதமானவர். உமது பேரன்பினாலும், இரக்கத்தினாலும் இதுவரை எங்களை காத்து வழிநடத்தினீர். இனிமேலும் காத்து வழிநடத்துவீர். ஏனெனில் உமது இரக்கமும், கிருபையும் அளவிடமுடியாது. நீரே எங்களை பொறுப்பெடுத்துக்கொள்ளும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் வேண்டுகிறோம், எங்கள் ஜீவனுள்ள பிதாவே! ஆமென்!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: