ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள். ஏசாயா 34:16.

பிரியமான சகோதர,சகோதரிகளுக்கு, நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த உலகில் எத்தனையோ நூல்கள் இருந்தாலும் அது வேதத்துக்கு அடுத்ததாகத்தான் இருக்கும். ஏனெனில் வேதப்புத்தகம் பல்வேறு காலக்கட்டத்தில் கடவுளின் தூண்டுதலால் தூய ஆவியால் நிறைந்து நமக்கு எழுதி தரப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் மூலம் கடவுள் நம்மோடு பேசுவார். கடவுள் நம்மோடு பேச வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தினமும் மறைநூலை ஆய்ந்து படிக்கவேண்டும். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு.இது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது அல்ல. 2 பேதுரு 1:21.

ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்: எதுவுமே தனித்து விடப்படுவதில்லை. துணையின்றி எதுவும் இருப்பதில்லை. ஏனெனில்,ஆண்டவரின் வாய்மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது. எசாயா 34:16. இது ஓர் அறிவுக் களஞ்சியமாகும். தினம், தினம் படிக்க படிக்க புதிதாய் நம்வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்யும்.உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லும் அளவுக்கு நீங்கள் அறிவிலும், ஞானத்திலும்,சிறந்து விளங்க செய்யும்.

மனிதனால் அளிக்க முடியாததும், மனிதனால் அழிக்க முடியாததுமான இது தேவனின் விரல்கோலம் எனலாம். மனிததன்மையின் புகைப்படமாய், மீட்புக்கு வழிக்கூறும் வரைபடமாய், பாவிகளின் தீர்ப்பு ஆவணமாய், விசுவாசிகளின் பூப்பாதைகளாய், தூய்மை விதைதாங்கிய தேவ மலராய், உலகில் உயிருடன் உலாவும் ஒரே நூல் இது எனலாம். மனிதர்களே! இது உங்கள் தாகமாய் இருக்கட்டும், தேவ மகிமையை அறிகிற நோக்கமாக இருக்கட்டும். ஆன்மீக அறிவில் சிறந்து விளங்க இது ஒரு சுரங்கமாகவும், பூங்காவாகவும் மகிழ்ச்சியின் பெரும் நதியாகவும், இருக்கும். நரகத்தின் வாசலை மூடிவிட்டு நம்மை பரலோகவாசல் நோக்கி அழைத்து செல்கிறது.

வரலாறு, வாழ்க்கை வரலாறு, தத்துவம், இறைவாக்கு, திருச்சட்டம்,  சாதனைகள், குலவரலாறுகள், தெய்வீக இயல் விளக்கங்கள், கவிதைகள், குறுங்கதைகள் என நூல் முழுக்க பல்சுவை விருந்துப்படையல் இதில் உள்ளது. அறிவியலை அறைகூவும் இது தேவ அறிவின் பரப்பைக் காட்டும் கண்ணாடி போன்றது. நமது அறிவின் குறைவை உணர்த்தும் சுட்டுவிரலாகும். உலகத்தின் படைப்பை பற்றியும், மனித வாழ்வைப் பற்றியும், வருங்காலம் பற்றியும் கூரும் ஒரே நூல் என்றும் சொல்லலாம். மனிதர்களை வாழவைத்து பல இதயங்களை எழுப்பியுள்ளது. இதை உணர்ந்து வாசிப்போமானால் தினம், தினம் மகிழ்ச்சியோடு சந்தோசத்தோடு, அறிவோடு வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கலாம். இந்த தவக்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுதி மொழி ஏற்று தினமும் வேதத்தை வாசித்து பயன்பெற்று, கடவுளின் திருவுள சித்தத்தை நிறைவேற்றுவோம்.

ஜெபம்
அன்பே உருவான இறைவா! உம்முடைய வேதத்தின் மகத்துவங்களை அறிய செய்த உமது கிருபைக்காய் உமக்கு நன்றி சொல்கிறோம். தினமும் உமது வார்த்தையை உட்கொண்டு அதன்படியே வாழ்ந்து உமக்கு பெருமை சேர்க்க உதவி செய்யும்.எங்கள் காலடிக்கு உமது வாக்கே விளக்கு, பாதைக்கு ஒளியும் இதுவே! உமது திருச்சட்டம் எங்களுக்கு இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால் எங்கள் துன்பத்தில் நாங்கள் மடிந்து போயிருப்போம். உமது சொற்கள் எங்கள் நாவுக்கு எத்தனை இனிமையானவை!உமது வாக்கு நம்பத்தக்கது. உமது கட்டளைகள் எங்களை மகிழ்விக்கின்றது. எங்கள் அறியாமை யை போக்கி முதியவர்களைவிட நுண்ணறிவை பெற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. எல்லாப்புகழும் உமக்கே, மகிமையும், வல்லமையும், மகத்துவமும், மாட்சியும் உமக்கே. துதி, கனம், மகிமை யாவும் உம் ஒருவருக்கே!ஆமென்!!அல்லேலூயா!!!.

(Written by: Sara, MyGreatMaster.com)

You may also like...

Leave a Reply

%d bloggers like this: