ஆண்டவரின் கண்கள் நேர்மையானவர்களை பார்க்கிறது.1பேதுரு 3:12

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

ஆண்டவரின் கண்கள் எப்பொழுதும் தமக்கு பயந்து உண்மையோடும் நேர்மையோடும் நடக்கும் ஒவ்வொருவரின் மேலும் இருக்கும். அவர்களை ஆண்டவர் ஒருபோதும் கைவிடவே மாட்டார். அவர்கள் கூப்பிடும்பொழுது அவர்களின் சத்தத்தை கேட்டு உடனே அவர்களின் எல்லா உபத்திரங்களில்  இருந்தும் காத்துக்கொள்வார். நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல. ஆனால் அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார் திருப்பாடல்கள் 34:19. அவர்கள் எலும்புகளை எல்லாம் அவர் பாதுக்காக்கின்றார். அவற்றுள் ஒன்றும் முறிபடாது. தீயோரைத் தீவினையே சாகடிக்கும்.நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர்.

ஆண்டவருக்கு பயந்து வாழ்வோமானால் அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவார். வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? அப்படியானால் தீச்சொல்லின்று நாவைக் காத்து வஞ்சக மொழியை நம்மை விட்டு அகற்றவேண்டும். இவ்வாறு தீமையை விட்டு விலகி நன்மை செய்வோமானால் நல்வாழ்வை அடைந்திடுவோம். ஏனெனில் ஆண்டவரின் கண்கள் நம்மை நோக்கிகொண்டிருக்கிறது.

நமக்கு தீமை செய்வோரை கண்டும் நாம் மனம் புழுங்க தேவையில்லை. பொல்லாங்கு செய்வோரைக்கண்டு பொறாமை படத்தேவை இல்லை. ஏனெனில் அவர்கள் புல்லைப்போல் விரைவில் உலர்ந்து போவார்கள். ஆண்டவர் நம்பி நலமானதை செய்து, நாட்டிலே குடியிருந்து நம்பத்தக்கவராய் வாழ்ந்து ஆண்டவரிலே மகிழ்ந்து இருந்தால் நமது உள்ளத்தின் விருப்பம் யாவையும் நிறைவேற்றுவார்.

மான்கள் நீரோடையை வாஞ்சித்து கதறுவதுபோல நம்முடைய ஆத்துமாவும் ஆண்டவருக்கென்று வாஞ்சித்து கதறினால் அப்பொழுது ஆண்டவர் நமது உள்ளத்தில் வந்து தங்கி நாம் எதிர்பார்க்கும் எல்லா காரியத்தையும் நமக்கு கிடைக்கும்படி செய்வார். உயிருள்ள ஒருவரும் நீதிமான் இல்லை என்பதால் நாம் கெஞ்சிக் கூப்பிடும்பொழுது ஆண்டவர் மனமிரங்கி நம் உள்ளத்தில் வாசம் செய்ய வருவார். அப்பொழுது நமது வாழ்க்கை நடுப்பகல் வரைக்கும் அதிகதிகமாக பிரகாசிக்கிற சூரியனைப்போல் பிரகாசமாயிருக்கும்.

நாமும் நம்மை காத்திட ஆண்டவரின் பாதத்தில் நம்மை ஒவ்வொருநாளும் ஒப்புக்கொடுத்து அவரின் இரத்தத்தால் கழுவப்பட்டு அவரின் வார்த்தைக்கு பயந்து கீழ்படிந்து நடந்து நாமும் நீதிமான்களுக்குரிய ஆசீரைப் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து ஆண்டவருக்கே மகிமையை சேர்ப்போம்.

ஜெபம்

அன்பின் இறைவா உம்மை போற்றுகிறோம்,புகழ்கிறோம். நீரே எங்களை முற்றிலும் பொறுப்பெடுத்து ஒவ்வொருநாளும் எங்களுக்கு போதித்து உமது பாதையில் நடந்து வர உதவி செய்தருளும். உமதுஅன்பிலே நடக்கவும்,உண்மையுள்ளவர்களாய் வாழவும் கற்றுத்தாரும். நீர் விரும்பும் செயல்களை மாத்திரம் செய்து உமது சித்தத்தை நிறைவேற்றி உம பாதம் பணிகிறோம்.உமது கண்கள் எப்பொழுதும் எங்கள்மேல் நோக்கமாயிருந்து எங்களுடைய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து ஆசீர்வதித்து வழிநடத்தும் எங்கள் ஜீவனுள்ள பரம தந்தையே!ஆமென்!!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: