ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்

ஆண்டவரின் திருச்சட்டம் நமக்கு அனைத்து காரியங்களையும் போதித்து வழிநடத்துகிறது. அதனால்தான் அதின் வழியில் நடப்போர் பேறுபெற்றோர் ஆகிறார்கள். அவரின் திருச்சட்டம் நமக்கு கடினமான காரியத்தை சொல்லவில்லை. அது முழுதும் அன்பின் வழியாகவும், ஒழுக்கத்தின் வழியாகவும் உள்ளது. ஆண்டவரின் ஒழுங்குமுறைகளை கடைப்பிடித்து அநீதி செய்யாமல் அவரின் கட்டளைகளை எல்லாம் கடைப்பிடித்து நடந்தோமானால் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.

ஆபிரகாம் ஆண்டவரில் முழுதும் நம்பிக்கை வைத்து தமது விசுவாசத்தை காத்துக்கொண்டார். யாக்கோபு ஆண்டவருக்கு பொருத்தனை செய்தபடி தனக்கு கிடைத்த எல்லாவற்றிலும் தசமபாகம் ஆண்டவருக்கு அளித்து தமது நீதியை நிலைநாட்டினார். யோசேப்பு தான் வாலிபவயதிலும் பொல்லாப்புக்கு விலகி ஆண்டவருக்கு பயந்து நடந்தார். மோசே பார்வோன் அரண்மனையில் வளர்ந்தாலும் அந்நிய தெய்வமான எகிப்தின் சிலை வழிப்பாட்டுக்கு விலகி தமது மக்களோடு சேர்ந்து பாடுகள் அனுபவித்தாலும் ஆண்டவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்படிந்து அவரின் சிநேகதரானார். எஸ்தர் தன்னுடைய இன மக்கள் அழிந்து போகாதவாறு மூன்று நாள் பகலும், இரவும் உபவாசம் இருந்து தம் மக்களை மீட்க தமது உயிரை பணயம் வைத்தாள். இவ்வாறு நாம் விவிலியத்தில் அநேகரை குறித்து வாசிக்கிறோம். அவர்கள் எல்லோரும் ஆண்டவரின் திருச்சட்டத்தின்படி நடந்து பேறுபெற்றவர்கள் ஆனார்கள்.

அன்பானவர்களே! நாமும் ஆண்டவரின் வார்த்தையை வாசித்து தியானித்து அதன்படி வாழ்ந்தால் நம்மையும் பேறுபெற்றோர் ஆகும்படி அனுதினமும் நமது தேவைகளை சந்தித்து நம்மோடு கூடவே இருந்து காத்தருள்வார். அவரின் திருச்சட்டத்தின்மீது நம்பிக்கை வைத்து, ஆர்வத்துடன் அதை கடைப்பிடித்து அதனின் பயனையும், இன்பத்தையும் பெற்றுக்கொள்வோம்.

அன்புள்ள இயேசப்பா!

உம்மை வணங்கி வாழ்த்துகிறோம். உமது திருச்சட்டத்தின்படி நடந்து உமக்கே மகிமை சேர்க்க எங்களுக்கு ஒவ்வொருநாளும் போதித்து வழிநடத்தும். நாங்கள் அறியாமல், தெரியாமல் செய்யும் பாவத்தை பொறுத்தருளும். எங்களிடம் உள்ள வீண் பிடிவாதத்தால் உம்மை கோபப்படுத்தாமல் காத்தருளும். உம்மைப்போல் மன்னிக்கும் குணத்தை எங்களுக்கு அளித்தருளும். உமது திருச்சட்டம் யாவையும் கடைப்பிடித்து அதன்படியே செய்து உமது பெயருக்கு மகிமை சேர்க்க சொல்லித்தாரும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உமது பாதம் முத்தமிட்டு கெஞ்சி மன்றாடுகிறோம், அன்பின் தெய்வமே!ஆமென்!அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: