ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்

திருப்பாடல் 89: 1 – 2, 3 – 4, 26 & 28
இறைவனுடைய அன்பை ஆழமாக உணர்ந்த ஆசிரியர், இறையனுபவத்தை பகிர்ந்து கொள்கின்ற பாடல் தான், இந்த திருப்பாடல். இறைவனின் அன்பை முழுமையாக அனுபவித்திருக்கிற ஒருவர், இறையன்பைப் பற்றி சொல்கிறபோது, அது வலிமைமிக்கதாக மாறுகிறது. அந்த வகையில், இந்த திருப்பாடலின் கடவுள் அன்பு அனுபவப்பூர்வமாக எடுத்துச் சொல்லப்படுகிறது. ஆண்டவரின் அன்புக்கு எல்லையே இல்லை, என்பதாக இந்த திருப்பாடல் சொல்கிறது.

இறைவனின் அன்பை எப்படி திருப்பாடல் ஆசிரியர் அனுபவித்திருக்கிறார்? திருப்பாடல் ஆசிரியர் சாதாரண மனிதர். ஆடு மேய்க்கக்கூடியவர். ஆனால், சாதாரண நிலையிலிருந்து அவரை, இறைவன் தன்னுடைய பணிக்காக தேர்ந்தெடுத்தார். அவரை அபிஷேகம் செய்தார். அவர் வழியாக புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். அவரது தலைமுறை வழி வழியாக நிலைத்திருக்கும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இதனை, ஆசிரியரால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. சாதாரணமான நிலையிலிருக்கிற தனக்கு, இவ்வளவு கொடைகளை வழங்குவது ஏன்? என்ற கேள்வி அவருக்குள்ளாக எழுகிறது. தகுதியில்லாத தன் மேல் இறைவனுக்கு இவ்வளவு பாசம் என்கிற போது, அந்த அன்பின் அனுபவத்தை, பாடல் வரிகளாக வெளிப்படுத்த விரும்புகிறார். அதைத்தான் இங்கே எழுதுகிறார்.

கடவுள் அனுபவத்தை நாம் கூட, நம் வாழ்வில் பெற்றிருக்கலாம். கடவுளின் அன்பை நாம் அவ்வப்போது எண்ணிப் பார்க்க வேண்டும். நம்முடைய வாழ்வை திரும்ப ஆராய்ந்து பார்க்கிறபோது, கடவுளின் அன்பின் ஆழத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அந்த ஆழத்தை நாம் நினைவுகூர்கிறபோது, மற்றவர்களை இன்னும் அதிக அன்போடு அணுகுவதற்கு, நமக்கு உதவியாக இருக்கும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: