ஆண்டவரை நம்பினோர் நிச்சயம் அவராலே ஆசீர்வதிக்கப்படுவர்.

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நாம் ஆண்டவரையே முழுதும் பற்றிக்கொண்டு அவரையே நம்பி இருப்போமானால் நிச்சயம் நம்மை ஒருபோதும் கைவிடவேமாட்டார். யார் மூலமோ எதைக்கொண்டோ செயல்பட வல்லவராய் இருக்கிறார்.சுமார் கி.மு.1020 லிருந்து 1025 வரை உள்ள காலங்களில் ரூத் என்னும் சரித்திரத்தின் மூலம் நமக்கு வேதத்தில் ஒரு சம்பவம் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

அக்கால கட்டத்தில் எலிமெலேக்கு என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் தனது மனைவி நகோமியோடும் தன் இரண்டு பிள்ளைகள் மக்லோன், கிலியோன் ஆகியரோடும் எருசலேமில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும்பொழுது ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் எருசலேமை விட்டு மோவாப் தேசத்துக்கு பிரயாணப்பட்டு போனார்கள். அந்த ஊரில் எவ்வளவோ ஜனங்கள் இருக்கும் பொழுது அவர்கள் மாத்திரம் அந்த ஊரை விட்டு வேறே ஊருக்கு போனார்கள். அங்கு போனால் அவர்கள் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்து விட்டார்கள். ஆனால் அங்கு போன சில வருஷங்களில் நகோமியின் கணவர் இறந்து விட்டார். அவளுடைய இரண்டு குமாரர் மாத்திரம் இருந்தார்கள். இவர்கள் மோவாபிய பெண்ணை திருமணம் செய்து
அங்கே வாழ்ந்து வந்தார்கள்.

ஏறக்குறைய பத்து வருஷங்கள் கழித்து அவளுடைய இரண்டு குமாரரும் இறந்து விட்டார்கள். இப்பொழுது நகோமி தனிமையானாள் எருசலேமில் பஞ்ச காலத்திலும் அங்குள்ள ஜனங்களை காப்பாற்றி வந்தார் ஆண்டவர். ஆனால் இவர்கள் தாங்களாகவே ஒரு முடிவு செய்து எருசலேமை விட்டு மோவாப் தேசத்திற்கு போனார்கள். ஆனால் போன இடத்தில் நகோமியின் கணவரும், அவளின் இரண்டு குமாரரும் இறந்து போய்விட்டனர். ஆண்டவரின் சித்தம் இல்லாமல் செய்வோமானால் நாமும் இப்படிதான் சில நேரங்களில் பல துன்பங்களை சந்திக்கிறோம். ஆனாலும் நமது அறியாமையை ஆண்டவர் மன்னித்து நமக்கு உதவி செய்வார்.

நகோமிக்கு ஒரு நன்மையை கொடுத்து அதாவது தமது மருமகள் ரூத் மூலம் ஆண்டவர் அவளின் வாழ்க்கையை ஆசீர்வதிக்கிறார். அவர்கள் மறுபடியும் எருசலேமிற்கு வந்து ஆண்டவரின் ஆசீரை
பெற்றுக்கொள்கிறார்கள். நகோமியின் பந்துக்கள் அவளிடம் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் உனக்கு ஒரு குழந்தையை பெற்றுக்கொடுத்து, அந்தப்பிள்ளையை எடுத்து வளர்க்கும் தாயாக உன்னை மாற்றிவிட்டாள், என்று நகோமியை வாழ்த்துகிறார்கள். நாமும் ஆண்டவரின் சித்தத்திற்கு கீழ்படிந்து நடந்தோமானால் நமக்கும் யார் மூலமாகவோ நம்முடைய வாழ்க்கையை கட்டி எழுப்புவார். அந்த குழந்தையின் வம்சத்தில் தான் நம்முடைய ஆண்டவரும் வந்து பிறக்கிறார். ஆண்டவரே தஞ்சம். அவரே என் அடைக்கலம் என்று அவரின் செட்டைகளின் கீழ் வந்தோமானால் அவர் நமக்கு நிறைவான பலனை அளிப்பார்.

ஜெபம்

அன்பின் இறைவா! நீரே எங்கள் தஞ்சம், அடைக்கலம். நாங்கள் அறியாமல் உம்மைவிட்டு எருசலேமை விட்டு போகாதபடிக்கு காத்துக்கொள்ளும். தெரியாமல் நாங்கள் அவ்வாறு செய்து விட்டால் எங்களை மன்னித்து ஆசீர்வதியும். எல்லா காரியங்களிலும் உமது சித்தத்தை அறிந்து அதன்படியே வாழ கற்றுத்தாரும். வானத்தையும், பூமியையும் படைத்த உம்மிடத்தில் இருந்து எங்களுக்கு ஒத்தாசை வருவதாக! மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள பரம தகப்பனே! ஆமென்!! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: