ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்

திருப்பாடல் 78: 18 – 19, 23 – 24, 25 – 26, 27 – 28

“இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பான்” என்று சொல்வது பழமொழி. ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையைக் கேட்டிருப்போம். இன்றைய திருப்பாடலை வாசிக்கிறபோது, இதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருக்கிறார்கள். அவர்கள் கண்ணீரோடு கடவுளிடம் முறையிடுகிறார்கள். அவர்களது முறையீடு எப்படி அமைந்திருக்கும்? எப்படியாவது இந்த இன்னல்களிலிருந்து கடவுள் தங்களை மீட்க வேண்டும் என்பதாகத்தான் அவர்களது மன்றாட்டு அமைந்திருக்கும். கடவுள் அவர்களை விடுவிக்கிறார். விடுதலை என்பது எளிதானது அல்ல. ஒரே இரவில் பெறக்கூடியது அல்ல. அதற்கு பலவாறு நாம் உழைக்க வேண்டும். இஸ்ரயேல் மக்களை கடவுள் விடுவிக்கக்கூடிய நிகழ்வு எவ்வளவு சவாலானது என்பது ஒவ்வொருவருக்கும் நன்றாக தெரியும். இவ்வளவு செய்த கடவுள் அவர்களை பாலைநிலத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வருகிறார்.

இறைவன் செய்திருக்கிற இவ்வளவு காரியங்களுக்கே இஸ்ரயேல் மக்கள் நன்றி உள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதனையும் கடந்து, கடவுள் அவர்களுக்கு எல்லா நலன்களையும் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், இவ்வளவு நன்மைகளைப் பெற்றுக்கொண்ட இஸ்ரயேல் மக்களின் மனப்போக்கு எப்படி இருந்தது? அவர்கள் நல்ல உணவுக்காக கடவுளுக்கு எதிராக கிளர்ந்தெழுகிறார்கள். உணவு கொடுக்கிறார். இறைச்சி வேண்டும் என்கிறார்கள். தங்களது பழைய நிலையை முற்றிலும் மறந்தவர்களாக , நன்றியில்லாதவர்களாக இஸ்ரயேல் மக்கள் முணுமுணுக்க தொடங்குகிறார்கள். இவ்வளவு நிகழ்வுகளுக்கு நடுவில், கடவுள் பொறுமையாக இஸ்ரயேல் மக்களின் குறைகளுக்கு செவிமடுத்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுகிறவராக இறைவன் இருக்கிறார். அதுதான் இறைவனின் அன்பு.

இறைவன் நன்றியில்லாதவர்களுக்கும் தன்னுடை அன்பை முழுமையாக வெளிப்படுத்துகிறவராக இருக்கிறார். அவர்களையும் தன்னுடைய பிள்ளைகளாக மதித்து, தன்னுடைய அன்பை வழங்குகிறார். இவ்வளவு அன்பையும், இரக்கத்தையும் நம்மீது பொழிந்து வரும் இறைவன் மீது, நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: