ஆண்டவர் இரக்கமும்,பரிவும் உள்ள இறைவன்.வி.பயணம்.34:6

இன்றைய சிந்தனை

பேரன்புமிக்கவரும்,நம்பிக்கைக்குரியவரும் ஆயிரம் தலைமுறைக்கு பேரன்பு செய்பவரும், செய்தவரும், நம்முடைய கொடுமையையும், குற்றத்தையும், பாவத்தையும், மன்னிப்பவரும் அன்பே உருவான ஆண்டவரின் நாமத்தை போற்றி துதித்து, அவருக்கு மகிமையை செலுத்தவே நம்மை அழைத்து அறிந்திருக்கிறார். அவரை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இரக்கத்தையும், பரிவும் வழங்கி நாம் எண்ணுவதற்கும், நினைப்பதற்கும்,மேலாக கொடுத்து ஒவ்வொரு நாளும் ஆசீர்வதித்து காத்து வழிநடத்தி வருகிறார்.

பொய் சொல்வதற்கு கடவுள் மனிதன் அல்லர். மனத்தை மாற்றிக்கொள்வதற்கு அவர் ஒரு மனிதப் பிறவியும் அல்லர். அவர் சொல்லியதை செய்யாமல் இருப்பாரோ? அல்லது அவர் உரைத்ததை நிறைவேற்றாமல் இருப்பாரோ? அவருக்கு விரோதமான மந்திரமும் இல்லை, அவருக்கு எதிரான குறி சொல்லுதலும் இல்லை. அவருடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பதே அவருக்கு மிகவும் பிரியமான காரியமாகும்.

ஆபிரகாமுக்கு வாக்களித்த இறைவன் அதை அவருக்கு நிறைவேற்றி கொடுத்தார். உன் சந்திதியில் ராஜாக்களும், பிரபுக்களும் தோன்றும்படி செய்வேன் என்று வாக்களித்த இறைவன் அவரின் முதிர்ந்த வயதில் அவருக்கு ஒரு குழந்தையை கொடுத்து கடவுள் சொல்லிய யாவற்றையும் நிறைவேற்றி கொடுத்தார். அவரின் இரக்கமும், பரிவும் என்றும் மாறாதது. செங்கடலை பிளந்து இஸ்ரயேல் ஜனங்களை உலர்ந்த பாதை வழியாக வழிநடத்தி அவர்களை துரத்தி வந்த எகிப்தியரை கடலில் மூழ்கும்படி செய்து அவர்களின் கைகளில் இருந்து தமது ஜனத்தை மீட்டுக்கொண்ட தேவன் மகா இரக்கமும், பரிவும்,உள்ள ஆண்டவர்.

சோதோம், கொமாரோவை அழிக்க நினைத்த இறைவன் அங்கிருந்து லோத்தை மட்டும் வெளியேற்றி தமது இரக்கத்தையும், பரிவையும் நிலைநாட்டிய கடவுளும் அவரே! நாம் யாராயிருந்தாலும் அவருக்கு பயந்து, கீழ்படிந்து நடந்து உண்மையாய் இருப்போமானால் அவரின்
இரக்கத்துக்கும், பரிவுக்கும், கிருபைக்கும் குறைவே இருக்காது. நாம் எதைக்குறித்தும் கலங்க தேவையில்லை. அவரே நம்மை முற்றிலும் பொறுப்பெடுத்துக்கொண்டு அவரின் தோளில் நம்மை சுமந்து நல்லதொரு நண்பராக, தாயாக நம்மை அரவணைத்துக்கொண்டு அவரின் தெய்வீக சந்தோஷத்தாலும், சமாதானத்தாலும் நிரப்பி ஆட்கொண்டு காத்திடுவார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரையே நம்பி நம்மை முற்றிலும் அவரிடத்தில் அர்ப்பணிக்க வேண்டும். அப்பொழுது அவரின் இரக்கத்துக்கும், பரிவுக்கும் எந்தவொரு குறைவும் இருக்காது.

அன்புள்ள ஆண்டவரே!!

உம்மை போற்றுகிறோம், எங்கள் சொந்தமாக வந்து எங்களின் சோதனைகளை தீர்த்து, உமது அன்பைக்கொண்டு அரவணைத்து மீட்ட எங்கள் இதயத்தின் தேவனாகிய ஆண்டவரே! உமக்கு கோடி நமஸ்காரம் செலுத்துகிறோம். உம்மேல் நம்பிக்கை வைத்து உம்மில் காத்திருப்போருக்கு நீர் அளவில்லாத இரக்கத்தையும், பரிவையும், காட்டுகிற தேவன் என்று மற்றவர்களும் அறிந்துக்கொள்ள உதவி செய்தருளும். அறியாமல், தெரியாமல் செய்யும் எல்லாவிதமான பாவங்களுக்கும், சாபங்களுக்கும் நீரே கழுவாயாக இருப்பதால்உம்மிடத்தில் மன்னிப்பு கேட்கிறோம். எங்களை ஒவ்வொரு நாளும் கரம் பிடித்து வழிநடத்தி காத்தருள வேண்டுமாய் இயேசுகிறிஸ்து வின் இணையற்ற நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம், எங்கள்பிதாவே

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: