ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்

திருப்பாடல் 34: 1, 8, 16 – 17, 18 – 19
”ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்”

ஒரு மனிதரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால், அவருடைய நெருக்கமானவரிடத்தில் கேட்டால் முழுமையாக அறிந்து கொள்ளலாம். இந்த உலகத்தில் இருக்கிற மனிதர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொருவிதமான ஆளுமையைப் பெற்றவர்கள். ஒரு சிலரைப் பார்த்தால் பயமாக இருக்கும். ஒரு சிலரைப் பார்த்தால் பேச வேண்டும் என்பது போல இருக்கும். ஆனால், வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை நாம் எடைபோட்டு விட முடியாது. வெளியில் சிரித்துக்கொண்டிருக்கிறவரின் பின்புலம் மோசமானதாகக் கூட இருக்கலாம். ஒருவரிடம் உள்ள நெருக்கம் தான், அவரைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவுகிறது.

கடவுள் இனியவர் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். காரணம், அவர் கடவுளை முழுமையாக சுவைத்திருக்கிறார். முழுமையாக அனுபவித்திருக்கிறார். கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் அதிகமாக பெற்றிருக்கிறார். எனவே தான், கடவுளை அவர் இனியவர் என்று சொல்கிறார். கடவுளின் இனிமையை நாம் சுவைக்க வேண்டுமென்றால், முதலில் நாம் அவரோடு நெருக்கமாக வேண்டும். தொலைவில் இருந்து பார்த்தால், கடவுளின் இனிமையை நாம் சுவைத்து உணர முடியாது. அவரோடு இருந்து, அவரை அனுபவித்தால் தான், நம்மால் கடவுளின் இனிமையை அறிந்து கொள்ள முடியும்.

கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் நமக்கு திருச்சபை அதிகமாகவே வழங்கியிருக்கிறது. நாம் அனைவருமே கடவுளின் இனிமையான பண்பை, ஒவ்வொருநாளும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்பது, தனிப்பட்ட முறையில் நாம் அறிந்த ஒன்று. இன்னும் ஆண்டவரோடு நெருங்கி வருவதற்கு நாம் உறுதி எடுப்போம். ஒவ்வொருநாளும் ஆண்டவரோடு இணைந்து வருவதற்கு நாம் முயற்சி எடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: