ஆண்டவர் எனக்குச் செவிசாய்த்தார்

ஆண்டவர் இரக்கமுள்ளவர். எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், உண்மையான மனமாற்றத்தோடு திரும்பி வந்தால், நிச்சயம் கடவுள் நம்மை ஏற்றுக்கொள்வார் என்பதை, அனுபவப்பூர்வமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு பாடல் தான் இந்த திருப்பாடல் (திருப்பாடல் 116: 1 – 2, 3 – 4, 5 – 6, 8 – 9). இறைவனிடத்தில் நம்பிக்கை உணர்வோடு நாம் மன்றாடுகிறபோது, இறைவனின் அருளும், ஆசீரும் நமக்கு நிறைவாகக் கிடைக்கும் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு வெளிக்காட்டுவதாக அமைகிறது.

துன்பத்திலும், துயரத்திலும், குற்ற உணர்ச்சியிலும் சாவை எதிர்நோக்கியிருக்கிற மனிதன் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறான். சாவை எதிர்கொள்ளவும் பயந்து குழப்பமான நிலையில் புலம்பிக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவன் கடவுளைத் தேடுகிறான். அவனிடத்தில் இப்போது இருப்பது தான் செய்த தவறுகளுக்காக மனம் வருந்திய நிலை. ஆனால், அவன் ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு கடவுள் அவனை ஏற்றுக்கொள்கிறார். அவனுக்கு தன்னுடை மன்னிப்பை வழங்கி, அவனுக்கு பிரச்சனைகளிலிருந்து விடுதலை கொடுக்கிறார். கடவுளை எந்த நிலையிலும் நாம் தேடலாம் என்பதை, இந்த திருப்பாடல் (திருப்பாடல் 116: 1 – 2, 3 – 4, 5 – 6, 8 – 9) நமக்கு வெளிக்காட்டுகிறது.

உண்மையான உள்ளத்தோடு கடவுளைத் தேடினால் நிச்சயம் நாம் கடவுளை அடைய முடியும். உடைந்த உள்ளத்தினர்க்கு அருகாமையில் தான், ஆண்டவர் இருக்கிறார். அந்த ஆண்டவரின் பாதத்தில் நம்மையே சரணாகதி அடைந்து, நல்ல மனிதர்களாக வாழ முயற்சி எடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: