ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்

”அனுபவமே சிறந்த ஆசான்” என்று பொதுவாகச் சொல்வார்கள். திருப்பாடல் ஆசிரியரின் இந்த வரிகள், அவருடைய அனுபவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அறியாததை, தெரியாததை கற்றுக்கொடுப்பது தான் அனுபவம். இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று அனுமானத்தின் அடிப்படையில் பல நிகழ்வுகள் நம்முடைய வாழ்க்கையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த அனுமானத்தை உறுதிப்படுத்துவதுதான் அனுபவம். திருப்பாடல் ஆசிரியருடைய அனுபவம் என்ன? அவருடைய அனுபவத்திற்கும், இன்றைய திருப்பாடலுக்கும் என்ன தொடர்பு?

”ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்” என்பதுதான் திருப்பாடல் ஆசிரியரின் அனுபவம். அவருடைய அனுமானம் இதுவரை, கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமே என்பதாக இருந்திருக்கிறது. அந்த அனுமானத்தின் அடிப்படையில் தான், அவரும் வாழ்ந்திருக்கிறார். ஏனென்றால், இஸ்ரயேல் கடவுளின் விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று அவருடைய முன்னோர்கள் வழியாக கேள்விப்பட்டிருக்கிறார். அந்த நம்பிக்கையோடு தான், அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவருடைய அனுமானம் சரியானதல்ல என்பதை உணர்கிறார். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, இந்த உலகத்திற்கு சொந்தமானவர் என்கிற அனுபவத்தை அவர் பெறுகிறார். இதுவரை, கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமே நன்மை செய்வார் என்றும், வேற்றுநாட்டினருக்கு தீமைகள் செய்வார் என்றும் அவர் நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், கடவுள் எல்லாருக்கும் நன்மை செய்யக்கூடியவர் என்பதை இப்போது உணர்ந்து, அந்த அனுபவத்தை இங்கே வெளிப்படுத்துகிறார்.

நம்முடைய வாழ்விலும் ஆண்டவர் நமக்கு நன்மை செய்யக்கூடியவராக இருக்கிறார். எல்லா வேளைகளிலும் நன்மை செய்யக்கூடியவராக இருக்கிறார். தீமைகளிலிருந்து நம்மை விடுவிக்கிறவராக இருக்கிறார். அந்த இறைவனை முழுமையாக அன்பு செய்வோம். நன்மைகளைப் பெறுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: