ஆண்டவர் தம் அன்பர்களின் சாவு அவரின் பார்வையில் விலைமதிப்புக்குரியது

திருப்பாடல் 116: 12 – 13, 14 – 15, 16 – 17
”ஆண்டவர் தம் அன்பர்களின் சாவு அவரின் பார்வையில் விலைமதிப்புக்குரியது”

இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொருவருமே கண்டிப்பாக இறந்தே ஆக வேண்டும். ஒரு சிலர் இயற்கையாக இறக்கலாம். ஒரு சிலர் விபத்தில் இறக்கலாம். ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ளலாம். ஒரு சிலர் கொலை செய்யப்படலாம். மனிதர்கள் எல்லாருமே ஒருநாள் இறப்பது உறுதி என்றாலும், யாரும் சாவையே நினைத்துக்கொண்டிருப்பதில்லை. ஒருவேளை நாம் உடல் சுகவீனப்பட்டிருந்தால், நாம் சாவை நினைத்துப் பயந்து கொண்டிருக்கலாம். ஆனால், பெரும்பாலும், நாம் வாழ்க்கையை வாழத்தான் விரும்புவோம்.

இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒரு சிலருக்கு சாவு எப்போது வரும் என்பது தெரியாமல் இருந்தாலும், தாங்கள் சாவுக்கு அருகில் இருக்கிறோம், சாவு எப்போதும் தழுவலாம் என்பதை அறிந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் கடவுளின் பார்வையில் விலைமதிப்புக்குரியவர்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். யார் இவர்கள்? எதற்காக இவர்களின் சாவு மதிப்பிற்குரியது? எப்படி இவர்களால் சாவை முன்கூட்டியே தீர்மானிக்க முடிகிறது? இவர்கள் தான் நேர்மையாளர்கள். கடவுளுக்கு அஞ்சி நடக்கிறவர்கள். தாங்கள் எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், தவறு என்றால் தவறு. சரி என்றால் சரி என்ற எண்ணத்தோடு வாழ்கிறவர்கள். இவர்களைப் பொறுத்தவரையில் பல எதிர்ப்புக்களை சம்பாதித்து வைத்திருக்கிறவர்கள். சாவை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறவர்கள். நிச்சயம் சாவு எந்த நேரமும் தங்களைத்தழுவலாம் என்று உறுதியாக நம்பக்கூடியவர்கள். இவர்களைத்தான் கடவுள் விலைமதிப்புள்ளவர்களாகக் கருதுகிறார். இவர்கள் தான் கடவுளின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள்.

நாமும் இப்படிப்பட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அப்படி வாழ்கிறவர்களுக்கு கடவுளின் அருளும் ஆசீரும் நிறைவாகக் கிடைக்கும். கடவுளின் அன்பிற்கு உரியவர்களாக நாம் மாறுவோம். திருச்சபையின் புனிதர்கள் இப்படிப்பட்ட வாழ்வு வாழ்ந்து நம்மையும் வாழப்பணிக்கிறார்கள். அவர்களின் வழியில் நாமும் வாழ முனைவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: