ஆண்டவர் நம்மை எல்லா இன்னல்களினின்றும் விடுவிப்பார்.தி.பா.54 : 7

இன்றும் நாம் நமது முழு இதயத்தோடும்,முழு உள்ளத்தோடும்,கடவுளாகிய ஆண்டவர் விதிக்கும் அவருடைய நியமங்களை கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தோமானால் நம்மை எல்லா இன்னல்களின்றும் விடுவிக்க வல்லவராய் இருக்கிறார்.அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும், நம்மையே உயர்த்தி தூய  மக்களினமாக வாழவைத்து வழிநடத்தி செல்வார்.

நம்மை ஆசீர்வதித்து வாழவைக்கவே ஆண்டவர் மானிடராக இவ்வுலகத்திற்கு வந்தார். நமக்காகவே முள் முடி சூட்டப்பட்டார். நமது பாவத்துக்காகவே சிலுவையில் அறையப்பட்டார். நம்மேல் கொண்டுள்ள தமது பேரன்பினால் உயிரையே நமக்கு கொடுத்துள்ளார்.அப்படியிருக்க மீதமுள்ள காரியங்களை கொடுக்காமல் இருப்பாரா?

யோனத்தானும்,தாவீதும் நல்ல நண்பர்களாய் இருந்தார்கள்.யோனத்தான் தாவீதை தன் உயிரெனக் கருதி அவர்மீது அன்பு கொண்டிருந்தார் யோனத்தானுக்கு தெரியும்,தனது தந்தையான சவுலின் ஆட்சியை ஆண்டவர் தாவீதுக்கு கொடுக்க போகிறதை அறிந்திருந்தும் அவர் தாவீதை உயிரென நேசித்ததினால் தன் தந்தை தாவீதை கொல்ல முயற்சி எடுக்கும் பொழுதெல்லாம் யோனத்தான் தாவீதுக்காக பரிந்து பேசி அவரை கொல்லாதபடிக்கு தமது தந்தையிடம் இருந்து காப்பாற்றி அனுப்பி வைக்கிறார். ஏனென்றால் தாவீதின்மேல் உள்ள அன்பின் பெயரால் அவருக்கு ஆணையிட்டு காப்பாற்றுகிறார்.

யோனத்தான் ஆட்சியை கைப்பற்ற நினைத்திருந்தால் தாவீதை காப்பாற்ற வேண்டிய அவசியமிருக்காது.ஆனால் தாவீதின்மேல் தம் உயிரென அன்பு கொண்டிருந்ததால் இவ்வாறு செய்கிறார். யோனத்தான் ஒரு சாதாரண மனுஷன்.அவரே தம் நண்பனுக்காக தம் ஆட்சியை விட்டுக்கொடுத்ததை 1 சாமுவேல் 19 மற்றும் 20ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆட்சியைவிட அன்பே பெரியது என்று நிரூபிக்கிறார்.

இதைப்போல் தான் நம் ஆண்டவரும் நம்மேல் வைத்த அதிகப்படியான அன்பினால் தமது ஜீவனை சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தார். நம்மை மீட்கும் பொருட்டு அவர் காயப்பட்டார். ஆகையால் அவரின் அன்பை நாமும் தினந்தோறும் நினைவு கூரும் பொருட்டு அவரின் வார்த்தைகளை வாசித்து தியானித்து அதன்படியே வாழ்ந்து அவருக்கே மகிமை சேர்ப்போம். நம்முடைய நெருக்கடியில் மாத்திரம் அவரை தேடாமல் எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் அவர்மேல் மிகுந்த அன்பு வைத்து அவரை போற்றி துதித்து நன்றியோடும், உண்மையோடும் இருந்து அவரைப்போல் மாறுவோம். அப்பொழுது எந்த துயரமும், துக்கமும், நம்மை சேதப்படுத்தாது.

ஜெபம்.

அன்பின் ஆண்டவரே! நீர் நல்லவர்,என்றென்றும் உமது பேரன்பை எங்கள்மேல் செலுத்துகிறீர். நாங்களும் எங்கள் நெருக்கடியான நேரத்தில் மட்டும் உம்மை நினைப்பவர்களாக இருக்காமல் இரவும், பகலும் உமது வேதத்தில் பிரியமாய் இருந்து உம்மையே போற்றி துதித்து,மகிமைப்படுத்த உதவி செய்தருளும். எங்களுக்கு வரும் எல்லா சோதனைகளில் இருந்தும் எங்களை விடுவித்து காத்தருளும். உமது அன்பை மறவாமல் நன்றி உள்ள இதயத்தோடு வாழ கற்றுத்தாரும்.போதித்து வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள தந்தையே! ஆமென்!!அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: