ஆண்டவர் நல்லவர், நன்மையே செய்பவர். தி.பா. 119:68.

வானத்தையும்,பூமியையும்,படைத்த ஆண்டவர் ஒவ்வொருநாளும் நம்மோடு கூடவே இருந்து நமது விருப்பங்கள் யாவற்றையும் தந்து நன்மை செய்பவராகவே இந்த உலகம் முழுவதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது. அவர் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.அவருடைய கண்கள் மனுபுத்திரரை காண்கிறது. அவருடைய கண்ணின் இமைகள் நம்மை சோதித்து அறிகிறது. நாம் பாவம் செய்யாதபடிக்கு நம்முடைய மனசாட்சியாய் இருந்து செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார். நம் இதயத்தில் அன்பை விதைத்து அதை முளைக்கச் செய்து அதற்கு தினந்தோறும் தண்ணீர் பாய்ச்சி அதை செழிக்க வைக்கவே நினைக்கிறார். ஆனால் நாமோ அதை சரியாக பராமரிக்காமல் விட்டுவிடுகிறோம்.

ஒரு ஊரில் ஒரு கணவனும், மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். ஒருநாள் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு அப்படியே அவர்கள் உள்ளத்தில் பதிந்து அது மனதுக்குள் வேறுன்ற ஆரம்பித்தது அதை முளையிலேயே கிள்ளி எரிந்துவிடாமல் விட்டுவிட்டதால் அது மனக்கசப்பாய் மாறியது.அவர்களுக்குள் இருந்த அன்பு நாளடைவில் குறைய ஆரம்பித்தது. அதனால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ விரும்பி பிரிந்துவிட்டனர்.

இவ்வாறு சில வருஷங்கள் போனது.அவர்கள் உடலால் பிரிந்தாலும் உள்ளத்தால் பிரியவில்லை. ஒருவரை ஒருவர் மனதில் நினைத்துக்கொண்டுதான் இருந்தனர். அதனால் அந்த கணவர் குடிக்க ஆரம்பித்தார். லேசாக ஆரம்பித்த பழக்கம் கொஞ்சம், கொஞ்சமாக அதிகமானது. ஒருநாள் அவ்வாறு குடித்துவிட்டு காரை ஒட்டிக்கொண்டு போகும் பொழுது போதையில் ஒரு மரத்தில் மோதி கார் நின்றது. அவருக்கு பலத்த அடிப்பட்டு சுயநினைவை இழந்து விட்டார்.

அதேசமயம் தற்செயலாக அந்த வழியாக வந்த அவரின் மனைவி இந்தக் காட்சியை பார்த்து உள்ளம் பதைத்து உடனே அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்கள். அங்கே டாக்டர்கள் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் கையெழுத்து கேட்டார்கள்.மனைவி சிறிது யோசித்தாலும் என்னதான் இப்போது பிரிந்து இருந்தாலும் ஒரு காலத்தில் அன்புடன் வாழ்ந்ததால் அவசரத்தின் காரணத்தால் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள். உடனே அவருக்கு மருத்துவ உதவி கிடைத்ததால் உயிர் பிழைத்துக் கொண்டார்.

ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் அவரின் தெய்வீகமான அன்பை கொடுத்திருக்கிறார்.அன்பே உருவான ஆண்டவர் அவருடைய சாயலில் மனிதர்களை படைத்து அதே அன்பை நமக்கும் கொடுத்திருக்கிறார். பிசாசு நமக்கு கொடுக்கும் கோபம், எரிச்சல், வீண் பிடிவாதம் கர்வம்,பொறாமை சுயநலம் இதையெல்லாம் விட்டுவிட்டால் நம்முடைய ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். ஏனெனில் ஆண்டவர் நல்லவர்,அவர் நமக்கு நன்மையே செய்வார்.

அன்புள்ள இயேசுவே!

நீர் நல்லவர், நன்மை செய்கிறவர் என்பதால் உம்மை துதிக்கிறோம், போற்றுகிறோம்,உமது சாயலால் படைக்கப்பட்ட நாங்கள் உம்மைப்போல் வாழ எங்களுக்கு கற்றுத்தாரும்.உம்மைப்போல் அன்பையும், பொறுமையையும் கொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உமது அன்பை இந்த பூமியில் நிலைநாட்ட உதவியருளும். மன்னிக்கும் குணத்தையும் தந்தருள வேண்டுமாய் உமது பாதம் கெஞ்சி மன்றாடுகிறோம். நீர் எங்களுக்காக சிலுவை சுமந்தீரே உமக்கு நன்றி சொல்கிறோம். எங்களுக்காக மரித்தீரே உமக்கு நன்றி சொல்கிறோம். நீர் செய்த நன்மைகளை மறவாமல் நன்றி உள்ளத்தோடு வாழ்ந்து உமது பெயருக்கு மகிமை சேர்க்க உதவியருளும். அன்பராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் நல்ல பிதாவே!

ஆமென்! அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: