ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்

ஆண்டவர் முன்னிலையில் நாம் மகிழ்ந்து பாட இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது. நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? நமது மகிழ்ச்சிக்கு எது காரணம்? ஆண்டவர் வர இருக்கின்றார் என்கிற செய்திக்காக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். எதற்காக ஆண்டவர் வர இருக்கின்றார்? இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு மெசியாவின் வருகை. அடிமைப்பட்டுக்கிடந்த இஸ்ரயேலுக்கு விடுதலையை வழங்கவும், அநீதியால் மலிந்து போயிருந்த உலகத்தை, நீதியோடு ஆட்சி செய்யவும் இஸ்ரயேல் மக்கள் மெசியாவை எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் காலம் வருகிறது, எனவே, அனைவரும் இதனை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் என்று ஆசிரியர் நமக்கு அழைப்புவிடுக்கிறார்.

இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்திருந்த மெசியாவை தாங்கள் பார்த்ததாக யோவானின் சீடர்கள் சான்று பகர்வதை இன்றைய நற்செய்தியும் நமக்கு எடுத்துக்கூறுகிறது. இது இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை வீண்போகவில்லை என்பதையும், கடவுள் தன்னுடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்பதையும், இது மகிழ வேண்டிய நேரம் என்பதையும் நமக்கு அறிவிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது. இந்த மெசியாவின் வருகை, கிறிஸ்து பிறப்போடு நிறைவுபெற்றுவிடவில்லை. அவர் மீண்டும் வருவார், நமக்கு நீதி வழங்குவார் என்கிற, நமது விசுவாசத்தின் மறைபொருளையும் இந்த திருப்பாடல் உணர்த்துவதாக இருக்கிறது. இந்த மெசியா நம்மோடு இருக்கிறார். நம்மில் ஒருவராக இருக்கிறார். அதுவும் நமக்கு மகிச்சியைத்தருவதாக இருக்க வேண்டும்.

கிறிஸ்து பிறப்பு விழாவோடு நமது கொண்டாட்டங்களும், மகிழ்ச்சியும் முடிந்து விடக்கூடாது. நாம் கிறிஸ்துவை வாழச்செய்ய வேண்டும். அவரது வாழ்வியல் மதிப்பீடுகள் நம் வழியாக தொடர்ந்து இந்த மண்ணில் நடக்கிறபோது, இயேசு நம்மில் ஒருவராக இருப்பதை, நாமும், நம் வழியாக மற்றவர்களையும் உணரச்செய்ய முடியும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: