ஆன்மாவின் பலம்

சோர்வு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று. அந்த சோர்வு உடல் அளவிலான சோர்வாக இருக்கலாம். உள்ளத்து அளவிலான சோர்வாக இருக்கலாம். அல்லது ஆன்மா சார்ந்த சோர்வாக இருக்கலாம். உடல் சார்ந்த சோர்வுக்கு, நல்ல உணவு உண்டால் அது சரியான தீர்வாக இருக்கும். நடக்கக்கூடிய நிகழ்வுகள் எதிர்பாராததாக இருக்கிறபோது, உள்ளம் சோர்வடைகிறது. இதையும் நாம் உடனே சரிசெய்து கொள்ளலாம். ஆனால், ஆன்மா சோர்ந்து விட்டால் நமது வாழ்க்கை அவ்வளவுதான். வாழ்வில் எத்தனை கவலை வந்தாலும், ஆன்மா தான் நமக்குள்ளிருந்து ஊக்கம் கொடுத்து இயக்கிக்கொண்டிருக்கும். அந்த ஆன்மாவை நாம் சோர்வடையச்செய்ய விடக்கூடாது. அதற்கு கடவுளோடு நாம் கொண்டிருக்கிற உறவு, நமது செப வாழ்வு உறுதுணையாக இருக்கும்.

இயேசு தனது பயணத்தில் தெளிவாக இருக்கிறார். யெருசலேம் நோக்கிய தனது பயணம் எப்படி அமையும் என்பதில் அவருக்கு சிறிதும் சந்தேகமில்லை. அதைத்தாங்குவதற்கு ஆன்மா வலிமையாக இருக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியாக இருக்கிறார். எனவே தான், இயேசு பெத்தானியா செல்கிறார். அவர் செபிப்பதற்கு செல்கிறார். தந்தையோடு நேரம் செலவிடுவதற்கு செல்கிறார். தனது ஆன்மாவை வலிமைப்படுத்தச் செல்கிறார். ஆன்மாவிற்கு தேவையான ஆற்றல் வேண்டி செல்கிறார். நிச்சயம் அந்த செப ஆற்றல், தந்தையிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய அருள், அவருடைய ஆன்மாவை ஆற்றலோடு இருக்கச்செய்யும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

அன்றாடம் நாம் ஆலயம் செல்வதும், திருப்பலியில் பங்குகொண்டு நற்கருணை அருந்தி ஆண்டவரை ஆராதிப்பதும், வழிபாடுகளில் பங்குகொள்வதும் நமது ஆன்மாவிற்கு ஊட்டம் தருவதற்கான வழிமுறைகள். நமது வாழ்வில் எந்த நிலையிலும் சோர்ந்து போகாமல் இருப்பதற்கான அருள் அடையாளங்கள். அவற்றில் முழுமையாகப் பங்கெடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.