ஆளுமை என்பது…….

யூதர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த முக்கியமான ஒழுங்குமுறைகளை, ‘விளக்கம்’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கைகளில் இயேசு வாழ்ந்த காலத்திலே மக்கள் மாற்றியிருந்தனர். அதிலே ஒன்று ஓய்வுநாளைப்பற்றிய விளக்கம். ஓய்வுநாளைப்பற்றிய சட்டம் எளிமையானது: பிறநாட்களுக்கும், ஓய்வுநாளுக்கும் வேறுபாடு இருக்க வேண்டும். எனவே, அன்றைய தினத்தில், மனிதர்களோ, அடிமைகளோ அல்லது விலங்குகளோ வேலை செய்யக்கூடாது, என்பதுதான் இ;ந் எளிமையான சட்டத்தின் பொருள். ஆனால், இந்த எளிமையான, சாதாரண ஒழுங்கிற்கு ‘விளக்கம்’ என்ற பெயரில் 39 வகையான தலைப்புகளில், இதனுடைய எண்ணிக்கையையும் சில பழமைவாத யூதர்கள். அதில் ஒன்று தான், ஓய்நாளில் சுமைகளைத்தூக்கிச்செல்வது தொடர்பானது ஆகும். இந்த ஒழுங்கு இரண்டு விவிலியப்பகுதி அடிப்படையில் வகுக்கப்பட்டது. எரேமியா 17: 21 -22 “ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் உயிரை முன்னிட்டு ஓய்வுநாளில் சுமை தூக்க வேண்டாம். அவற்றை எருசலேமின் வாயில்கள் வழியாகக் கொண்டு செல்லவும் வேண்டாம். ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்தும் சுமைகள் தூக்கிச்செல்ல வேண்டாம். அன்று எந்த வேலையும் செய்ய வேண்டாம். உங்கள் மூதாதையருக்கு நான் கொடுத்த கட்டளைப்படி ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடியுங்கள்”. அதேபோல நெகேமியா 13: 15 – 19 ல், ஓய்வுநாளில் சுமைகள் தூக்குவதை இறைவாக்கினர் கண்டிக்கிறார். ஆனால், இந்த இரண்டு இடங்களிலும், ஓய்வுநாளைப்பொருட்டாக மதிக்காமல், ஓய்வுநாளையும் வியாபார நோக்கோடு நடத்துகிறவர்களுக்கு கண்டிப்பாகச்சொல்லப்பட்டது. இதை அவர்கள் ஒரு பொருத்தமில்லாத நிகழ்வுக்கு பொருத்துவதில்தான், அவர்களின் அறிவீனமும், இயேசுவின் ஆளுமையும் வெளிப்படுகிறது.

முப்பத்து இரண்டு ஆண்டுகளாக அந்த மனிதன் முடக்குவாதத்தால் துன்பங்களைத்தாங்கி வந்திருக்கிறான். மருத்துவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்து இருக்கிறது. அந்தக்குளத்திலும் அவனை இறக்கிவிட யாருமில்லை. இனி அவ்வளவுதான், தன் வாழ்க்கை இப்படியேத்தான் இருக்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டிருந்த அந்த மனிதனின் வாழ்க்கையில் இயேசு ஒரு மாற்றத்தைக் கொண்டுவருகிறார். குணப்படுத்த முடியாத ஒரு மனிதனுக்கு குணம் கிடைத்திருக்கிறது. உண்மையில், அனைவரும் கடவுளைப்போற்றிப் புகழ வேண்டிய நேரமிது. குணம் கிடைத்த அந்த மனிதனோடு சேர்ந்து கொண்டாட வேண்டிய அற்புதமான தருணம் இது. ஆனால், குறுக்குப்புத்தி உடைய சில யூதர்கள் அதிலே குற்றம் காண்கிறார்கள். சட்டம் என்கிற குறுகிய பார்வையோடு இந்த யூதர்கள் வாழ்வை அணுகுகிறார்கள். அது உண்மைக்கான திறவுகோல் அல்ல. இது நிச்சயம் கண்டிக்கப்படக்கூடியதும், தண்டிக்கப்படக்கூடியதுமான செயல். சட்டத்தோடு, மனிதநேயத்தையும் இணைத்து ஒட்டுமொத்தமாக ஒரு நிகழ்வைப்பார்ப்பதுதான், உண்மையை அடைவதற்கான வழி, அதுதான் உண்மையான ஆளுமை என்பதை இயேசு நமக்குக் கற்றுத்தருகிறார்.

ஒட்டுமொத்தப்பார்வை, முழுமையான ஆளுமை. உண்மையான ஆளுமை என்பது எதையும் முழுமையாகப் பார்க்கக்கூடியது. ஒட்டுமொத்தப்பார்வை உண்மையை அறிவதற்கான சரியான வழியாகும். ஒரு வழக்கு வருகிறது என்றால், அந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிற இரண்டு பேரையும் விசாரித்தால் தான், நாம் உண்மையை அறியமுடியும். அதேபோல, நம்முடைய பார்வை திறந்த பார்வையாகவும், அகன்ற பார்வையாகவும், ஒட்டுமொத்தக்கோர்வையின் வடிவமாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆளுமையை வளர்த்துக்கொள்ள இறையருள் வேண்டுவோம்.

– அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: