இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!

இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப்போக்குபவர், என்று திருமுழுக்கு யோவான் இயேசுவைப்பற்றிச் சான்று பகர்கிறார். இயேசுவை எதற்காக ஆட்டுக்குட்டியோடு யோவான் ஒப்பிட வேண்டும்? என்று பார்த்தால், ஆட்டுக்குட்டியைப்பற்றி பழைய ஏற்பாட்டின் பார்வை நமக்கு தெரிய வேண்டும். ஆட்டுக்குட்டி என்பது இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் பாவம் போக்கும் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விலங்கு. விடுதலைப்பயணம் 28: 38 ல் வாசிக்கிறோம்: ‘ஒரு வயது செம்மறிக்குட்டிகளை நாளுக்கு இரண்டு வீதம், எந்நாளும் நீ பலிபீடத்தில் பலியிடுவாய்.’ அதாவது இஸ்ரயேல் மக்களுடைய பாவம் போக்கும் பலியாக அன்றாடம் இது பலியிடப்பட்டது. அதேபோல் விடுதலைப்பயணம் 12 வது அதிகாரத்தில், இஸ்ரயேல் மக்கள் எகிப்திலே அடிமைகளாக இருந்தபோது ஆண்டவரின் கோபம் பார்வோன் மன்னன் மீது விழுவதை நாம் வாசிக்கிறோம். அப்போது எகிப்திய குடும்பங்களின் தலைமகன்கள் அனைவரும் இறக்க நேரிடுகிறது. ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை கதவு நிலைகளில் பூசியிருந்த இஸ்ரயேல் மக்களின் வீடும், பிள்ளைகளும் காப்பாற்றப்படுகிறார்கள். இவ்வாறு, ஆட்டுக்குட்டியின் இரத்தம் அவர்களைக்காப்பாற்றுகிறது. எரேமியா 11: 19 கூறுகிறது: வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்பட்ட சாந்தமான செம்மறிபோல் இருந்தேன். எசாயா 53: 7 ல் பார்க்கிறோம்: அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும் அவர் தம் வாயைத்திறவாதிருந்தார். ஆக, இறைவாக்கினர்கள் எரேமியாவும், எசாயாவும் மெசியாவை ஆட்டுக்குட்டியோடு ஒப்பிட்டு இறைவாக்கு உரைக்கிறார்கள். திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப்பணி ஆற்றியவர். எனவே, இறைவார்த்தையை யோவான் நன்கு அறிந்து வைத்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அந்த இறைவார்த்தை சொல்லும் ஆட்டுக்குட்டி இயேசுதான் என்று அறிந்து கொள்கிறார். அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். ஆட்டுக்குட்டியாகிற இயேசுவைப்போன்று நம்முடைய வாழ்வு மற்றவர்களுக்கு வாழ்வு தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் இயேசு நமக்கு கற்றுத்தருகிற பாடம்.

– அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: