இந்நாள் நல்ல செய்தியின் நாள். 2 அரசர்கள் 7:9

ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு அவரின் வார்த்தைக்கு பயந்து கீழ்படிந்து நடக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நாளின் செய்தி நல்ல செய்தியாக இருக்கும் என்பதில் ஏதாவது ஐயம் உண்டோ!

ஒருநாள் சமாரிய நகர வாயிலில் எலிசா ஆண்டவரின் வாக்கை கூறி ஆண்டவர் கூருவது இதுவே: ” ஒரு மரக்கால் கோதுமைமாவு ஒரு வெள்ளிக் காசுக்கும்,இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக்காசுக்கும்,விற்கப்படும் என்று கூறினார். அப்பொழுது அரசனின் உதவியாளன் அவரிடம், இதோ பாரும்! எலிசாவே ஆண்டவர் வானத்தின் கதவுகளைத் திறந்து விட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா? என்று கேட்கிறான்.அதற்கு எலிசா இதை உன் கண்களால் காண்பாய். ஆனால் அதில் நீ எதையும் உண்ணமாட்டாய்,என்று சொன்னார். 2 அரசர்கள் 7:1,2 ஆகிய வசனத்தில் வாசிக்கலாம்.

ஆம்,ஆண்டவரின் வார்த்தை ஒருபோதும் மாறாது. அது சொன்னால் சொன்னதே!அது வெறுமையாய் திரும்பி வரவே வராது. எலிசா சொன்னதுபோல ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு வெள்ளிக்காசுக்கும்,இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக்காசுக்கும், விற்கப்பட்டது. அந்த அரசனின் அதிகாரி தன் கண்களால் காண நேரிட்டது. ஆனால் எலிசா சொன்னது போல அதில் எதையும் உண்ண முடியாமல் போய்விட்டது. ஏனெனில் மக்கள் அவனை நகர வாயிலில் மிதித்துபோட அவன் இறந்து போனான் என்று அதே 7ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

நீங்கள் இந்த 2 அரசர்கள் 7ம் அதிகாரம் முழுதும் வாசித்து பார்த்தால் நன்கு விளங்கிக் கொள்ளலாம். அந்த அரசனின் அதிகாரி நம்பிக்கை வைக்காமல் கடவுளின் வல்லமையை அற்பமாக கருதினார். அதனால்தான் வானத்தின் கதவுகளை திறந்தாலும் இந்த காரியம் நடக்குமா? என்று கேட்கிறார். நாமும் கூட சில நேரங்களில் ஆண்டவரின் வல்லமையை மிக குறைவாக நினைக்கிறோம். அதனால் மனம் சோர்ந்து போகிறோம். நாம் சோர்ந்து போகக் கூடாது என்ற காரணத்திற்காக இவைகளையெல்லாம் எழுதி பாதுக்காத்து வைக்கப்பட்டுள்ளது. இதை வாசிக்கும் பொழுது ஒவ்வொருவரும் விசுவாசத்தில் பெருகி நாமும் பயன் அடைந்து மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமான பயன் அடையும்படி செய்யலாம். ஏனெனில் கடவுளால் ஆகாத காரியம் ஒன்றுமில்லையே!

எங்கள் கடவுளாகிய ஆண்டவரே!

உம்மை போற்றுகிறோம்,ஆராதிக்கிறோம். நீர் எத்துனை மேன்மை மிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்:வான்வெளியை கூடாரமென விரித்துள்ளவர்: கார்முகில்களை தேராகக் கொண்டு காற்றின் இறக்கைகளில் பவனி வரும் தேவன். உம்மிடத்தில் வல்லமையும்,மகத்துவமும் உண்டு என்பதை நாங்கள் ஒருபோதும் மறவாமல் உம்மேல் முழுதும் நம்பிக்கை வைத்து செயல்பட்டு உம்மிடத்தில் இருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்கிறோம் எங்கள் நல்ல பிதாவே! ஆமென்!அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.