இன்றைய சிந்தனை :கடவுளை அறியும் அறிவையே பெற்றுக்கொள்வோம்

உண்மையாகவே கடவுள் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறார்; அவரைப்பற்றிய அறிகிற அறிவினால் அதை தெரிந்து கொள்ளலாம்.

நாம் அறிவடைவோமாக,ஆண்டவரைப்பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழைபோலவும்,நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார் ” ஓசேயா 6 : 3.

கடவுள் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது அன்பு ஒன்றையே. நம்முடைய அன்பு எப்படிப்பட்டது? நம் உள்ளத்தை ஆராய்ந்து அறிந்து நம்மை அர்ப்பணிப்போம். நம்முடைய அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்து போகாதப்படிக்கு காத்துக் கொள்வோம்.

நம் இதயத்தை ஆண்டவரிடமே திருப்புவோம். நம்மைக் காயப்படுத்துகிறவரும் அவரே, நம்மை குணமாக்குபவரும் அவரே, நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, நம்முடைய காயங்களை கட்டுகிறவரும் அவரே.அவருடைய தழும்புகளால் குணமாகச் செய்கிறார். அப்படிப்பட்ட இறைவனின் திருவுளத்தை நாம் அறிந்து கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை சொல்லித் தெரியனுமோ!

நாம் ஒவ்வொருவரும் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப் பற்றிய அறிவை நிறைவாக அடைய வேண்டும். அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவராக நடந்துக்கொள்ளவும் நற்செயல்கள் அனைத்தும் செய்து கடவுளைப் பற்றிய அறிவில் வளர வேண்டும். கொலோசையர் 1 : 9,10. எல்லா மனிதரும் மீட்புப்பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார். 1 திமொத்தேயு 2 : 4. நாம் நிலைவாழ்வை எதிர்நோக்கி இறைப்பற்றுக்கு இசைந்த உண்மை அறிவைப் பெறவும் கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் நாமும் பங்கேற்று சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்பினால் அவரைப்போல் நாமும் உயிர்த்தெழ இயலும். பிலிப்பியர் 3 : 10.

நம்முடைய ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நாம் பெறும் ஒப்பற்ற செல்வம். மற்ற எல்லாவற்றையும் இழப்பமாக கருதுவோம். ஏனெனில் மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரானால் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன ? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுக்க முடியும் ? மத்தேயு 16 : 26.

ஆகையால் நாம் கிறிஸ்துவோடு இணைந்து வாழ்ந்து கடவுள் கிறிஸ்துவை வெற்றிப் பவனியில் பங்குக் கொள்ள செய்தது போல நாமும் கிறிஸ்து வழியாக அறிவைப்பெற்று நறுமணம் போல் எங்கும் பரவி ஒளிவீசுவோம். கடவுளைப்பற்றிய அறிவுக்கு எதிராக தலைதூக்கும் அனைத்து மேட்டிமையையும் தகர்த்தெறிவோம். நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முழுமையாக அவருக்கு கீழ்படிந்து அவரின் எண்ணங்களை ஆழமாக அறிந்து செயலாற்றுவோம்.

தம்முடைய மாட்சியாலும், ஆற்றலாலும், கடவுள் நம்மை அழைத்துள்ளார். அவரை அறிந்துக்கொள்வதன் மூலம் இறைப்பற்றுடன் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான எல்லாவற்றையும் அவர்தம் இறை வல்லமையால் நமக்கு அருளியிருக்கிறாரே! இப்பண்புகள் யாவும் நம்முள் நிறைந்து பெருகுமானால் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ள நாம் பயனற்ற செயல்களில் ஈடுபடாமல் நம்மை பரிசுத்தமாக காத்து கடவுளையும் நமது ஆண்டவராகிய இயேசுவையும் அறிவதன் மூலமாக நாம் அருளும், நலமும் பெற்று வாழ கிருபை அளித்திடுவார்.

அன்பும்,இரக்கமும்,நிறைந்த இறைவா!!

உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், ஆராதிக்கிறோம். ஆண்டவரே! உம்மை அறிகிற அறிவினால் எங்களை நிரப்பி ஆசீர்வதியும். கடல் தண்ணீரால் நிரம்பியுள்ளது போல நாங்களு உம்மை முழுமையாக அறிகிற அறிவினால் நிரப்பும். எங்கள் உயிரை நஷ்டப்படுத்தாதப்படிக்கு காத்துக்கொள்ளும். உலகம் தோன்றியது முதல் நீர் எங்களுக்காக ஏற்பாடு செய்து வைத்திருக்கும் ஆட்சியைப் உரிமைப் பேறாகப் பெற்றுக்கொள்ள உதவிச் செய்யும். உமது மகிமையால் நிரப்பும்.உம்மைப்போல் மாற்றும். துதி, கனம், மகிமை யாவும் உமக்கே! உம் ஒருவருக்கே செலுத்த உதவிச் செய்யும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் பரம தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: