இன்றைய சிந்தனை : வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள். யோவான் 7 : 24

மனிதர்களாகிய நாம் அநேக வேளைகளில் அவசரப்பட்டு வார்த்தையை சொல்லிவிடுகிறோம். அதனால் அடுத்தவர் மனது எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்று யாருமே சிந்திப்பதில்லை. அதனால்தான் வேத வசனம் இவ்வாறாக சொல்கிறது. என் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே இதைத்தெரிந்துக்கொள்ளுங்கள்; ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும், பேசுவதிலும், சினங்கொள்வதிலும் தாமதமும் காட்ட வேண்டும் என்று யாக்கோபு 1 : 19 ல் படிக்கிறோம்.

உள்ளத்தின் நிறைவே வாய் பேசும். மனிதர் பேசும் ஒவ்வொரு வீண்வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும்  என உங்களுக்கு சொல்கிறேன். உங்கள் வார்த்தையைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும், கருதப்படுவீர்கள் என்று மத்தேயு 12: 36 & 37 ஆகிய வசனத்தில் படிக்கிறோம்.

ஒருநாள் ஒரு தாயார் தமது 15 வயது நிரம்பிய தன் மகளோடு ரயிலில் வந்துக்கொண்டு இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் பக்கத்தில் இன்னும் பல பேர்கள் அமர்ந்து பிரயாணம் செய்துக் கொண்டு இருந்தார்கள். அப்பொழுது அந்த பெண் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். அவளுக்கு மரம், செடி, வீடு எல்லாம் சேர்ந்து ஓடுவதாக தோன்றியது.அவள் தன் தாயாரிடம் அம்மா பாருங்கள், எல்லாம் சேர்ந்து ஓடுகிறது என்று சொன்னாள் . அந்த தாய் சிரித்துக்கொண்டு மௌனமாக இருந்தார்கள். பிறகு சிறிது நேரத்தில் நிலாவை பார்த்து அம்மா அந்த நிலாவை பாருங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொன்னாள். அப்பொழுதும் அவர்கள் மௌனமாக சிரித்துக்கொண்டு வந்தார்கள். சிறிது நேரம் கழித்து மழை தூர ஆரம்பித்தது.

அந்த பெண்ணுக்கு ரொம்ப சந்தோஷம். ஜன்னல் வழியாக கையை வெளியே விட்டு மழைத்தண்ணீரை ஆவலோடு கையில் பிடித்து அம்மா பாருங்கள், இந்த மழைத்தண்ணீர் எவ்வளவு வெள்ளையாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு வந்தாள். அருகில் அமர்ந்திருந்த சில பேர் இந்த பெண்ணுக்கு பைத்தியமாக இருக்கும் போல என்று முணுமுணுத்தார்கள். எவ்வளவு பெரிய பெண்ணாக இருந்துக்கொண்டு ஒரு சிறு பிள்ளையை போல் நடந்துக்கொள்கிறாள் என்று சொன்னார்கள். ஒருவர் அந்த அம்மாவிடமே கேட்டு விட்டார்கள். நீங்கள் உங்கள் பெண்ணை ஒரு டாக்டரிடம் கொண்டு காண்பிக்கலாமே, அவள் நடவடிக்கை ஒரு மாதிரியாக இருக்கிறதே என்று கேட்டார்கள்.

அந்த தாய் துக்கம் கலந்த சிரிப்போடு, என் மகள் பிறந்ததில் இருந்து கண் பார்வை தெரியாது. அவளுக்கு நேற்றுதான் அறுவை சிகிச்சை மூலம் புதிதாக கண் பொருத்தப்பட்டது. அவள் இன்று தான் இந்த உலகை பார்க்கிறாள். கடந்த 15 வருஷங்களாக அவள் இருட்டில் இருந்தாள். இன்றுதான் வெளிச்சத்தை காண்கிறாள். அதனால்தான் அவளுக்கு எல்லாமே புதிதாக இருக்கிறது. ஒரு குழந்தைப்போல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள். இதைக்கேட்ட யாவருக்கும் ஐயோ! அவசரப்பட்டு நாம் ஏதோதோ சொல்லிவிட்டோமே என்று நினைத்தார்கள். வெளித்தோற்றத்தை பார்த்து அவசரப்பட்டு சொன்னால் நாம்தான் வெட்கப்பட வேண்டியதாகும். ஆகையால் ஆண்டவரின் வார்த்தைப்படி பேசுவதற்கு தாமதம் காட்டி கடவுளுக்கு ஏற்புடைய செயல்களை செய்து அவரின் திருவுளத்தை நிறைவேற்றி அவருக்கே மகிமையை சேர்ப்போம்.

அன்பின் ஊற்றாகிய இயேசப்பா!!

உம்மைப்போல் பொறுமையும், இரக்கத்தையும், அன்பையும் எங்களுக்கு தாரும் அப்பா. இதோ நாங்கள் மண் என்று நீர் அறிந்திருக்கிறீர். அவசரப்பட்டு யாரையும் எதற்காகவும், குறை சொல்லாதப்படிக்கு எங்கள் வாயின் வார்த்தைகளை காத்துக்கொள்ளும். உம்மைப்போல் எல்லோரிடமும் அன்பைக் காட்ட எங்களுக்கு உமது திருஇதயத்தைப்போல் தந்தருளும். ஆண்டவரே! நியாயத்தீர்ப்பு நாளில் உம்முன் நிற்கும் பொழுது கறைதிரை அற்றவர்களாக நிற்க போதித்து வழிநடத்தும். குறித்த காலம் வருமுன் அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம் என்றும் இருளில் மறைந்திருப்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறவர் நீரே என்றும் எங்கள் உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துபவர் நீரே என்றும் அறிந்தும் பாவம் செய்யாதபடிக்கு நாங்கள் யாவரும் உம்மிடம் பாராட்டு பெறுபவர்களாக இருக்கவும், மாறவும் எங்கள் கரம் பிடித்து வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் நல்ல தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: