இன்றைய தொழுநோய் !

இன்றைய முதல் வாசகமும் (சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 1-11), நற்செய்தி வாசகமும் (மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45) தொழுநோயைப் பற்றிப் பேசுகின்றன. இயேசுவின் காலத்தில் மக்களால் மிகவும் அருவருக்கப்பட்ட அந்தத் தொழுநோயினின்று ஒரு மனிதரை இயேசு எவ்வாறு மீட்டார் என்பதையே நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது.

இயேசுவின் காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னால் வரை தொழுநோயாளர்களின் நிலை ஒரே மாதிரிதான் இருந்தது. அவர்களது நோய்க்கு மருந்தில்லை. அவர்கள் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டனர். தம் குடும்பத்தினரிடமிருந்தும், ஊரிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்னும் பட்டியலிலே இருந்தனர்.

அப்படி இருந்த ஒரு மனிதரைத்தான், இயேசு துணிந்து தொட்டுக் குணப்படுத்தினார். இதிலே நமது கவனத்தைக் கவரும் ஒரு செய்தி என்னவென்றால், இயேசு அவரது உடலை நலப்படுத்தும் முன்னர், அவரது உள்ளத்தையும், ஆன்மாவையும் தொட்டார், நலமாக்கினார் என்பதுதான். இயேசு விரும்பியிருந்தால், அவரைத் தொடாமலே, ஒரு வார்த்தையினால் நலமாக்கியிருக்க முடியும். ஆனால், இயேசுவின் இந்த நலப்படுத்தும் செயல் ஓர் அன்பின், பரிவின் செயல் என்பதை நற்செய்தியாளரே பதிவு செய்திருக்கிறார். எனவே, இயேசு “அவர்மீது பரிவுகொண்டு, அவரைத் தொட்டு, அவரிடம் “நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக” என்று சொல்லி அவரைக் குணப்படுத்தினார். அவர்மீது பரிவுகொண்டதன் மூலம் அவரது ஆன்மாவையும், அவரைத் தொட்டதன் மூலம் அவரது உள்ளத்தையும் இயேசு குணப்படுத்தினார். அவருக்கு நம்பிக்கையைத், தன் மதிப்பையும், மாண்பையும் மீட்டுத் தந்தார்.

இன்று தொழுநோய் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், வேறு வடிவங்களில் அந்த நோய் இன்னும் நம்மிடையே இருக்கிறது. சாதியம், தீண்டாமை என்பது அருவருக்கத்தக்க ஒரு தொழுநோயாக இன்னும் விளங்குகிறது. சாதியின் பெயரால் இன்னும் மக்கள் ஒதுக்கப்பட்டுத், தீண்டத்தகாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். சாதியின் பெயரால் திருமணம், காதல், உயர் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக மதிப்பு போன்றவை மறுக்கப்படுகின்றன.

இன்று நமது கடமை என்ன? இயேசுவைப் போல நாமும் மனதளவிலும், உடல் அளவிலும் சாதி மறுப்பாளர்களாக, சாதியம் என்னும் தொழுநோயைத் துடைத்தெறிபவர்களாக எழவேண்டும். அனைத்துத் தரப்பு மக்களுடனும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுடன் உறவு கொண்டு, அவர்களின் விழாக்களில் கலந்துகொண்டு, அவர்களோடு உணவருந்தி, உறவாடி இயேசுவின் பணியைத் தொடர்வோம்.

மன்றாடுவோம்: தொழுநோயாளர்மீது பரிவுகொண்டு அவரைத் தொட்டுக் குணப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். சாதீய நோயால் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சமூக நீதியை வழங்கும் பணியைநாங்கள் செய்ய உமது தூய ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~பணி குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: