இயல்புகளுக்கேற்ப வாழ்வை முன்னெடுப்போம்

செபம் என்றால் “இதுதான்“ என்பதை நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், இதுதான் இன்றைக்கு திருச்சபையில் நாம் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாகவும் இருக்கிறது. திருச்சபை என்பது பலதரப்பட்ட எண்ணங்களையும், சிந்தனைகளையும், இயல்புகளையும் கொண்ட மிகப்பெரிய அமைப்பு. ஒரு சிலர் இயல்பாகவே துடிப்பாக இருப்பர். சிலர் அமைதியான இயல்பைக் கொண்டவர்களாக இருப்பர். திருச்சபையின் வழிபாட்டு முறை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி நடக்கிறபோதுதான், அனைவருமே ஈடுபாட்டோடு பங்கு பெறுவதற்கு வசதியாக இருக்கும்.

ஒரு சிலர் ஆடிப்பாடி இறைவனைப் போற்ற விரும்பலாம். ஒரு சிலர் அமைதியாக இறைவனை மனதிற்குள் நினைத்து போற்றலாம். அவரவர் இயல்பிற்கேற்ப வழிபடுவதற்கு, அனைவருமே உதவியாக இருக்க வேண்டும். இதுதான் சிறந்தது, வழிபாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நமது எண்ணங்களைப் புகுத்துகிறபோது, அங்கே இயல்பாக பிரச்சனை எழுகிறது. இன்றைய நற்செய்தியிலும் அதைத்தான் பார்க்கிறோம். மார்த்தாவின் உபசரிப்பு, விருந்தோம்பல் பற்றிய எண்ணம் வேறு. மரியாவின் உபசரிப்பு, விருந்தோம்பல் பற்றிய எண்ணம் வேறு. இரண்டுமே சிறப்பானவை. இரண்டுமே தேவையானவை. ஆனால், மார்த்தா தனது எண்ணம் தான் சிறந்தது, அதுதான் அங்கே புகுத்தப்பட வேண்டும் என்று எண்ணுகிறபோது, அங்கே பிரச்சனை வருகிறது.

குடும்ப வாழ்வில் ஒருவர் மற்றவரின் இயல்பை புரிந்து அதற்கேற்ப வாழ்வதற்கு முன்வரவேண்டும். அதுதான் பக்குவமான மனநிலைக்கு அடித்தளம். யார் சிறந்தவர்? என்கிற மனநிலை இல்லாமல், சிறப்பான வாழ்விற்கான மனநிலையை நாம் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி எடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: