இயேசுகிறிஸ்து வழியாக நமக்கு வெற்றி கொடுக்கும் கடவுளுக்கு நன்றி

கடவுள் இயேசுகிறிஸ்து வழியாக மனித இனம் முழுவதும் வெற்றி வாகை சூடியவர்களாக புதிய உலகமாகிய விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லவே இந்த பூமிக்கு வந்து ஒரு மனிதனை போல பல பாடுகளை அனுபவித்து நமக்கு முன்மாதிரியை காண்பித்து சென்றுள்ளார். ஏனெனில் ஒரே மனிதனால் பாவம் இந்த உலகில் வந்தது. ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்படியாமையால் பலர் பாவிகளானதுபோல, ஒருவரின் கீழ்படிததால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.

ஆனால் குற்றத்தின் தன்மை வேறு அருள்கொடையின் தன்மை வேறு. ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள் கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. இந்த அருள்கொடையின் விளைவு வேறு. அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு, எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள் கொடையாக வந்த விடுதலை. இவ்வாறு சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல்,நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது..அந்த அருளே மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்கலாக்கி, நிலைவாழ்வு பெற நமக்கெல்லாம் வழிவகுக்கிறது.

கடவுள் இயேசுகிறிஸ்து வழியாக வெற்றியைக் கொடுத்து அவரே உலகம் அனைத்திற்கும் அரசராக திகழ்வார்..அந்நாளில் ஆண்டவர் ஒருவர் மட்டுமே இருப்பார்; அவர் திருப்பெயர் ஓன்று மட்டுமே இருக்கும்..செக்கரியா 14 : 9 . ” கடவுள் ஒருவரே ” அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை. அவரிடம் முழு இதயத்தோடு முழு அறிவோடு, முழு ஆற்றலோடு அன்பு செலுத்துவதே அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் ஓன்று. அவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்கள். அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவினுடைய உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா ! அப்பம் ஒன்றே, ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் எல்லோரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.

நாம் யாவரும் ஒரே எதிர்நோக்குக் கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல , உடலும் ஒன்றே, தூய ஆவியும் ஒன்றே, அவ்வாறே ஆண்டவரும் ஒருவரே நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே, திருமுழுக்கு ஒன்றே, எல்லோருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே, அவரே எல்லோருக்கும் மேலானவர், எல்லோர் மூலமாகவும் செயலாற்றுபவரும் அவரே, எல்லோருக்குள்ளும் இருப்பவர் அவரே. இவர் ஒரே பழியைப் நம்முடைய பாவங்களுக்கு செலுத்திவிட்டு கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார். ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா? ஒரு காலத்தில் தொலைவில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசுகிறிஸ்துவோடு இணைந்து அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறோம்.

அன்பானவர்களே! நாம் யாவரும் கிறிஸ்துவின் அன்பிலே ஓன்று பட்டு ஒற்றுமையுடன் செயல்பட்டு கடவுள் இயேசுகிறிஸ்து வழியாக கொடுக்கும் வாழ்வில் பங்குக் கொண்டு நன்றி உள்ளவர்களாக வாழ்வோம். இதுவே இயேசுகிறிஸ்து வழியாக வெற்றி கொடுக்கும் கடவுளுக்கு நன்றி காணிக்கையாகும். அவருக்கு உகந்த வாழ்க்கையாகும்.

அன்பின் இறைவா!

உம்மை போற்றுகிறோம், துதிக்கிறோம், ஆராதிக்கிறோம். தகப்பனே நாங்கள் யாவரும் ஒற்றுமையோடு செயல்பட்டு நீர் அளிக்கும் விண்ணகத்தின் வாழ்வுக்கு உம்மை அறியாத சகோதர , சகோதரிகளையும் உம்மிடம் அழைத்துவர உம்மைப்போல் எங்களையும் உமது அன்பினால் நிரப்பும். இந்த பூமியில் வந்து பிறந்த ஒவ்வொரு வருக்காகவும் நீர் சிலுவை சுமந்து உமது இரத்தத்தை சிந்தியிருக்கிறீர்.  உமது இரத்தத்தால் எல்லோரும் அருகில் வர எங்கள் யாவருக்கும் ஒரே எண்ணத்தையும், ஒரே சிந்தையையும் கொடுத்து நீர் விரும்பும் உகந்த வாழ்வில் பங்குக் கொள்ள உதவிச் செய்யும். எங்கள் பாவங்கள், குற்றங்கள், யாவையும் அனுதினமும் மன்னித்து
உமது மீட்பில் பங்குக் கொண்டு என்றென்றும் உம்மோடு இருக்க உமது அரசவையில் பங்குக் கொள்ள எங்கள் யாவருக்கும் போதித்து வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: