இயேசுவின் கடின உழைப்பு

இயேசு மக்களுக்கு ஓய்வுநாட்களில் கற்பித்ததாக, நற்செய்தியாளர் கூறுகிறார். ஓய்வுநாள் என்பது கடவுளுக்கான நாள். இஸ்ரயேல் மக்கள், இறைவனிடமிருந்து தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். இறைவனையே நாள் முழுவதும் தியானிக்க, அவரிடத்தில் செபிக்க ஏற்புடைய நாள். போதகர்களின் மறையுரைகளை, கருத்தூன்றிக் கேட்கும் நாள். ஆக, இயேசு மக்கள் மத்தியில் சிறந்த போதகராக வாழ்ந்ததை, மக்களால் ஏற்றுக்கொண்டதை, இது உணர்த்துகிறது.

கற்பித்தல் என்பது எளிதானல்ல. எல்லோராலும் நிச்சயம் கற்பிக்க முடியாது. அது ஒரு கலை மட்டுமல்ல. அதில் கடின உழைப்பும் அடங்கியிருக்கிறது. இயேசு ஓய்வுநாட்களில் மக்களுக்கு கற்பித்தார் என்றால், எந்த அளவுக்கு அவர் தன்னையே தயாரித்திருக்க வேண்டும். இறை அறிவில் தன்னையே வளர்த்தெடுத்திருக்க வேண்டும். செய்கிற பணி எதுவானாலும், கடின உழைப்பு மிக, மிக முக்கியம். அதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டு. மக்களுக்கு புரிகிற மொழியில் சொல்வதும், மக்களை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுவதும், நமது தயாரிப்பிலும், கடின உழைப்பிலும் தான் இருக்கிறது. அதனை இயேசு திறம்படச் செய்திருப்பதை, இந்த பகுதி நமக்கு உணர்த்துகிறது.

நமது வாழ்வில் நாம் எதைச்செய்தாலும், திறம்படச் செய்ய உறுதி எடுக்க வேண்டும். அதில் நமது கடின உழைப்பையும் கொடுக்க வேண்டும். நமது கடின உழைப்பு நமக்கான வெற்றியைத் தேடி தரும். அந்த நம்பிக்கையோடு, இயேசுவிடமிருந்து, கன உழைப்பைக் கற்றுக்கொள்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: