இயேசுவின் வல்லமை

இயேசுவின் வார்த்தைகள் மட்டுமல்ல, அவருடைய செயல்பாடுகளும் மக்களை வியப்பில் ஆழ்த்தின. தொழுகைக்கூடத்தில் தீய ஆவியால் பிடிக்கப்பட்டிருந்த மனிதன், அங்கிருந்தவர்களுக்கு பெருத்த துன்பத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தான். அவனை இயேசு நலமாக்குகிறார். நற்செய்தி நூல்கள் அனைத்திலும் தீய ஆவிகளைப்பற்றியும், அவற்றிலிருந்து இயேசு மக்களுக்கு விடுதலை கொடுத்த நிகழ்வுகளையும் பல இடங்களில் பார்க்கிறோம். இதன் பிண்ணனி என்ன? என்பதை நாம் பார்ப்போம்.

யூத மக்கள் பேய்களையும், தீய ஆவிகளையும் இருப்பதாக நம்பினர். இந்த உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தீய ஆவிகள் ஆக்கிரமித்து இருப்பதாக நினைத்தனர். அரச அரியணையிலிருந்து, குழந்தைகளின் தொட்டில் வரை, இந்த தீய ஆவிகள் ஆக்கிரமித்திருந்தன. கல்லறைகளுக்கு நடுவில் ஏராளமான மண்டை ஓடுகள் காணப்பட்டன. இந்த மண்டை ஓடுகளின் நடுவில், சிறிய அளவிலான துவாரங்கள் இடப்பட்டிருந்தன. இது எதைக்குறிக்கிறது என்றால், அறுவைச்சிகிச்சை வளர்ச்சியடையாத அந்த காலக்கட்டத்திலேயே, இந்த சிறிய துவாரத்தை மருத்துவர்கள் செய்திருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்களின் நம்பிக்கை, தீய ஆவி அந்த துவாரத்தின் வழியாக, வெளியே சென்றுவிடும் என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த அளவுக்கு, தீய ஆவிகளைப்பற்றிய தாக்கம் மக்கள் மத்தியில் குடிகொண்டிருந்தது. ஆனால், மக்களின் மனதில் இவ்வளவு பயத்தை ஏற்படுத்தியிருந்த அந்த தீய ஆவிகளைத்தான், இயேசு சர்வசாதாரணமாகக் கையாண்டார். அவற்றை வெற்றிகொண்டார்.

தீய ஆவிகளை எதிர்த்து வெற்றிபெறுவதற்கு, நாம் இயேசுவின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். இயேசுவின் திருப்பெயருக்கு அவ்வளவு வல்லமை இருக்கிறது. நமது வாழ்வில், தீய ஆவிகளைப்பற்றிய தவறான பயங்களும், எண்ணங்களும் வருகிறபோதெல்லாம், இயேசுவின் பெயரை உச்சரிப்போம். அவர் பாதுகாப்பில் எந்நாளும் மகிழ்வோடு வாழ்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: