இயேசுவே நமது வாழ்வின் அருமருந்து

கடவுளை பலவிதமான வழிகளில் களைப்புறாமல் தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும், வாழ்வில் எப்போதும் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இயேசுவின் வார்த்தைகள் ஆறுதலாக அமைகிறது. கிரேக்கர்கள், ”கடவுளைக்காண்பது அரிது. கடவுளைக்கண்டாலும் அதனை மற்றவர்களுக்கு விளக்கிக்கூறுவது அரிதிலும் அரிது” என்று சொல்வார்கள். யோபு புத்தகத்திலே சோப்பார், யோபுவிடம் கேட்பதும் இதுதான், ”கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை நீர் அறிய முடியுமா?” (யோபு 11: 7). அப்படியென்றால், கடவுளைக்காணவே முடியாதா? நன்மை செய்கிறவர்களுக்கு சோதனை மேல் சோதனைதான் கிடைக்குமா? அவர்கள் ஆறுதல் கூட பெற முடியாதா? என்கிற கேள்விகள் நமக்குள்ளாக எழலாம். அதற்கு பதில்தான் இயேசுவின் அமுதமொழிகள்.

கடவுளைப்பற்றிய தேடல் இயேசுவில் நிறைவடைகிறது. வாழ்வில் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கு நிறைவு இயேசுவில் கிடைக்கிறது. இயேசு சொல்கிறார், ”பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”. இந்த வார்த்தைகள் கடவுளைப்பற்றிய தேடல் உள்ளவர்களுக்கும், வாழ்வில் நன்மையே செய்ய வேண்டும் என எண்ணுகிறவர்களுக்கும் ஆறுதல் தருகின்ற வார்த்தைகள். 1பேதுரு 5: 7 சொல்கிறது: ”உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்”. ஆக, இயேசுவை நமது வாழ்வில் பற்றிக்கொண்டால், வாழ்வின் அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான விடைகிடைக்கும்.

நமது வாழ்வில் விடைகாண முடியாத பல கேள்விகளுக்கு இயேசுவில் நிச்சயம் பதில் கிடைக்கும். இயேசுவை உணர்ந்து, அவரை முழுமையாக அறிந்து கொண்டால், அனுபவித்தால் நமது வாழ்வில் கவலை என்பதே இல்லை.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: