இயேசுவைப் பின்பற்றுவோம்

நாம் அனைவருமே இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இன்றைய நற்செய்தி (+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62 ) வாசகத்தின் சாராம்சம். இன்றைக்கு பல புனிதர்களை தாய்த்திருச்சபை நமக்குத் தந்திருக்கிறது. இந்த புனிதர்கள் அனைவருமே சிறப்பான வாழ்வை வாழ்ந்தவர்கள். இப்படியெல்லாம் கூட வாழ முடியுமா? என்று, நாமே வியந்து பார்த்தவர்கள். நாம் வாழ்ந்த இந்த சமுதாயத்தில் வாழ்ந்த, புனித அன்னை தெரசா இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நவீன காலத்திலும் ஏழை, எளிய மக்கள் மீது அன்பு கொண்டு, சிறப்பான வாழ்வை வெளிப்படுத்தியவர்கள் நமது நாட்டில் பணிபுரிந்த இந்த புனிதை. எப்படி இவர்களால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ முடிந்தது என்றால், அவர்களது எளிமையான பதில், இறைமகன் இயேசுகிறிஸ்து. இயேசுவைப் பின்பற்றி வாழ்ந்த அந்த வாழ்க்கை தான், அவர்களால் இப்படிப்பட்ட சிறப்பான வாழ்வை வாழ, உறுதுணையாக இருந்தது.

இயேசு தான், நமக்கு வழிகாட்டி. முன்மாதிரி. திருத்தூதர்கள் இயேசுவை பின்பற்றி தான், தங்களது வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். அவரிடம் கற்றுக்கொண்ட விழுமியங்களைத்தான், தாங்கள் வாழ்வியல் கோட்பாடுகளாக அறிவித்தார்கள். ஆக, இயேசுவை நமது முன்மாதிரியாகக் கொண்டு நாம் வாழ வேண்டும். அப்படி வாழ்கிறபோது, எதன் மீதும் நாம் ஈர்ப்பு கொள்ளக்கூடாது. எல்லாவற்றையும் கடந்து செல்லக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். இயேசு ஒருவர் தான் நமது இலக்காக இருக்க வேண்டும். பெற்றோரோ, பதவியோ, செல்வமோ எதுவுமே நமக்கு தடையாக இருக்கக்கூடாது. புனித அன்னை தெரசா எங்கோ பிறந்தார். ஆனால், அனைத்தையும் விட்டுவிட்டு கிறிஸ்துவுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தார். அந்த அர்ப்பணம் நமதாக வேண்டும். அதுதான் உண்மையான, இயேசுவைப் பின்பற்றக்கூடிய வாழ்வு.

நமது வாழ்க்கையில் நாம் இயேசுவை உண்மையிலேயே பின்பற்றுகிறோமா? உண்மையான அர்ப்பணத்தோடு அவரது வாழ்வை, நாம் வாழ முற்படுகிறோமா? எனச்சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவை முன்மாதிரியாகக் கொண்டு, நமது வாழ்வை அமைத்துக்கொள்ளும் வரம் வேண்டி, நாம் ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: