இயேசுவை தொடா்ந்து பின்பற்ற முடிகிறதா?

மாற்கு 10:17-30

இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 28ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

சகோ. மோகன் சி. லாசரஸ் 1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலுமாவடி என்னும் சிறு கிராமத்தில் பிறந்தார். முதலில் இவர் இந்து மதத்தின் பாரம்பரியத்திலும், நம்பிக்கையிலும் வளர்க்கப்பட்டார். அந்த சமயத்தில் இயேசுவை ஒரு மதத்தின் தலைவராக மட்டும் அறிந்திருந்தார்.

அவரது 14வது வயதில் நோய்வாய்ப்பட்டு இதயம் வீங்கி, முழு உடலும் செயலிழந்து கஷ்டப்பட்டார். அவரது குடும்பத்தினரும, நண்பர்களும் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தபோது தனது தாயார் கேட்டுக்கொண்டதின் நிமித்தம் திரு. சாமுவேல் என்ற குடும்ப நண்பர் ஜெபித்தபோது, ஒரு தெய்வீக வல்லமை அவரைத் தொட்டது. அவர் இயேசுவின் வல்லமையினால் பரிபூரண சுகம்பெற்று தன் படுக்கையை விட்டு எழுந்திருந்தார். பின்னர் தனது வாழ் நாட்களை ஆண்டவரின் பணிக்காக அர்ப்பணித்தார்.

தனது இறையியல் படிப்பை, சென்னையிலுள்ள இந்துஸ்தான் வேதாகமக கல்லூரியில் பயின்றபின், தனது சொந்த ஊரான நாலுமாவடியில் நற்செய்திப்பணியைத் துவக்கினார். இதன் மூலம் “இயேசு விடுவிக்கிறார் ஊழியம்” 1978 ஆம் ஆண்டு நாலுமாவடியில் ஆரம்பித்தார். இயேசு கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதும், உலகமெங்குமுள்ள விசுவாசிகளை ஜெபிக்க தூண்டுவதே இவர்களின் முக்கிய நோக்கமாகும்.

அன்புமிக்கவர்களே! தன்னுடைய 14ம் வயதில் இயேசுவைக் கண்ட சகோ.மோகன் சி லாசரஸ் தொடா்ந்து எந்தவித இடைவெளியும் இன்றி அவரைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறார். இயேசுவை அனுபவித்து அந்த அனுபங்களை மக்களுக்கு சொல்லி கொடுக்கிறார். பல மக்கள் கூட்டம் கூட்டமாக அவரை பின்தொடர்கின்றனர். இயேசுவைப் பின்பற்றியதால் அவர் அடைந்த நன்மைகள், சம்பாதித்த பெயர் புகழ், பெற்ற மகிழ்ச்சி அனைத்தும் ஏராளம் ஏராளம். நாமும் ஆண்டவரை தொடா்ந்து பின்பற்றினால் நன்மைகள் பல பெறலாம், புகழ், பெயர் சம்பாதிக்கலாம், மகிழ்ச்சியும், மனநிறைவும் கிட்டும். ஆகவே வாருங்கள்! அன்பு மாந்தரே! இயேசுவை தொடர்ந்து பின்பற்றுங்கள் என நம்மை அன்பாய் அழைக்கிறது பொதுக்காலம் 28ம் ஞாயிறு.

இயேசுவின் பின்னால் நானும் செல்வேன் திரும்பி பார்க்க மாட்டேன், திரும்பியே பார்க்கமாட்டேன் என வைராக்கியமாக முடிவெடுத்த பலர் இப்போது இயேசுவின் பின்னால் செல்வதே கிடையாது. அவர்கள் பாதையே முழுவதும் மாறிவிட்டது. காரணம் என்ன? இயேசுவை விட உலக ஆசைகளை பெரிதாக நினைத்ததால் இயேசு மிகவும் சிறியவரானார் அவைகள் பெரிதானது.

இயேசுவை விட உலக ஆசைகளை பெரிதாக நினைப்பவர் என்றும் சிறியவரே. அவர் என்றும் கடைசியானவரே. இது வாழ்க்கையல்ல. இந்த வாழ்க்கை வெறுப்பைத் தரும். வெறுமையை உண்டாக்கும். மனஅழுத்தத்தை விதைக்கும். மகிழ்ச்சியை பறிக்கும்.

ஆகவே ஒன்றே ஒன்று நமக்கு தெளிவாக தெரிய வேண்டும். என்ன அது? இயேசுவைப் பின்பற்றுபவரே உலகில் சாதித்தவர். அவரை தொடா்ச்சியாக பின்பற்றினால் மட்டுமே நாம் என்றும் சிறக்க முடியும். வாழ்வையும் சிறப்புச் செய்ய முடியும். ஆகவே நாம் இப்போது இயேசுவை பின்பற்றவில்லை என்றால் இலக்கு மாறிவிட்டது என்று அர்த்தம். ஆகவே இப்போது இயேசுவை பின்பற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வாருங்கள் தொடருவோம் இயேசுவை. பின்பற்றுவோம் அவரை தொடா்ந்து. இயேசுவை தொடர்ந்து பின்பற்ற செய்ய வேண்டியவைகள் மூன்று.

1. இயேசுவில் அன்பு
திருத்தந்தை மூன்றாம் யூஜின் திருத்தந்தையாக இருந்தபோது, அவருக்கு ஆன்ம குருவாக இருந்தவர் பெர்னார்டு என்பவர். ஒருசமயம் திருத்தந்தை மூன்றாம் யூஜின் தன்னுடைய ஆன்ம குருவிடம், “திருச்சபையின் அன்றாட அலுவல்களுக்கு இடையே எனக்கு இறைவனிடம் ஜெபிப்பதற்கு நேரமே இல்லை” என்று அங்கலாய்த்துக் கொண்டார். அதற்கு அவர், “உமது ஞான வாழ்வுக்கு முதலிடம் கொடுத்து, ஜெபத்தில் முழுமையாக கருத்தூன்றி நிற்காவிடில், திருச்சபையில் உம் அலுவல்கள் எல்லாம் நீர் எதிர்பார்ப்பதைவிட மிக விரைவில் உம்மை நரகத்திற்கே இட்டுச் செல்லும். இது எச்சரிக்கை” என்றார்.

இயேசுவின் மீது நாம் அன்பு கொண்டிருக்க வேண்டும். அந்த அன்பு நாளும் மலர வேண்டும். அதில் தான் ஆனந்தம் உள்ளது, பேரானந்தம் பொங்குகிறது. இயேசுவின் மீது அன்பு கொண்டுள்ள நமக்கு உலக ஆசைகள் பெரிதாக தெரிவதில்லை. இயேசுவை அன்பு செய்வோம். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவை அன்பு செய்வோம்.

2. இயேசுவில் பற்று
போர்த்துகலில் செல்வந்தரான அரசகுலப் பெற்றோரின் மகனாக மார்ச்1, 1647ல் பிறந்த தூய ஜான் பிரிட்டோ இயேசுவின் மீது கொண்டிருந்த பற்று மிகவும் வியப்புக்குரியது. ஜான் பிரிட்டோவினால் ஏராளமான மறவர் சாதியினர் கிறிஸ்தவத்தைத் தழுவிக் கொண்டிருந்தனர். இதனால் பிரிட்டோவை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார் சேதுபதி.

கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்களில் முதன்மையானவர் மறவர் சாதி இளவரசர் தடியத்தேவன் என்பவர். தடியத்தேவன் கிறிஸ்தவர்களின் உதவியோடு தலைமையைக் கைப்பற்றி விடுவானோ என்ற அச்சம் சேதுபதிக்கு இருந்தது. தடியத்தேவன் நிறைய மனைவிகளை வைத்திருந்தான். தடியத்தேவன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவுடன் தனது முதல் மனைவியை வைத்துக்கொண்டு மற்றவர்களை அனுப்பி விட்டான். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களுள் ஒருத்தியான கதலி என்பவள் தன் மாமாவான கிழவன் சேதுபதியிடம் முறையிட்டாள். தடியத்தேவன் இவ்வாறு ஆனதற்கு, காரணம் கிறிஸ்தவம் என்றும், மூல காரணம் ஜான் பிரிட்டோ என்றும் சேதுபதிக்குத் தெரிந்தது.

ஆகவே அவன் அருளானந்தரைக் கொல்ல வழிதேடினாள். திருமுழுக்கு யோவானைப் போலவே ஒரு பெண்ணின் சினத்துக்குப் பலியானார் புனிதர். முகவையிலிருந்து ஓரியூருக்கு நடத்திச் செல்லப்பட்டார். ‘மரணத்தை எதிர்நோக்கியுள்ளேன். இதுவே என் வேண்டுதலின் இலக்காக இருந்தது. எனது உழைப்பிற்கும் வேதனைகளுக்கும் விலை மதிப்பற்ற பரிசாக இந்த நாள் அமைகிறது” என மரணத்திற்குமுன் தம் தலைமைக் குருவுக்கு எழுதினார். தம் இறுதித் தண்டனைக்குக் குறிக்கப்பட்ட இடமான மணல்மேட்டிற்கு விரைந்து சென்றனர். வெட்டப்பட ஏதுவாய் தலைதாழ்த்தினார். தலையைக் கொய்த முரடர்கள் புனிதரது கைகளையும், பாதங்களையும் வெட்டினர். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவாகட்டும் என்ற எண்ணத்துடன் இரு கம்பங்களை நட்டு, உடல் சிதைவுகளைத் தொங்கவிட்டனர். அது மழைக் காலமில்லையெனினும் 8 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. மழைக்குப் பின்னர் புனிதரின் சில எலும்புத் துண்டுகளே மீந்துகிடந்தன.

மறைசாட்சியின் இரத்தத்தால் மணல்மேடு சிவந்தது. சிவந்த மணலை இன்றும் காணலாம். மறைசாட்சி அருளானந்தர் வரலாறு மறக்க முடியாத ஒன்று. அவர் இயேசுவை மட்டும் பற்றி பிடித்திருந்ததார். உலகப்பற்றை உதறித்தள்ளினார். அவருடைய பின்பற்றுதலில் பிளவே இல்லை. தொடா்ந்து இயேசுவை பின்பற்றினார். இன்றும் உயிர் வாழ்கிறார்.

3. இயேசுவில் பிடிப்பு
தொடக்க கால சிறந்த வரலாற்று ஆசிரியர் எசபியஸ் (Eusebius) எழுதியுள்ள Ecclesiastical History என்ற புத்தகத்தில் பேதுருவின் இறுதி நாட்கள் பதிவு செயப்பட்டுள்ளது. மத்திய ஆசிய நாடுகளான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, பித்தினியா நாடுகளுக்கு சென்று நற்செய்தியை அறிவித்தார் பேதுரு.

பேதுருவின் மனைவியும் அவரோடு சோ்ந்து நற்செய்திப்பணி அறிவித்தார். பேதுருவின் நற்செய்தி அறிவிப்பினால், அகரிப்பா அரசனின் நான்கு மனைவிகள் மனம் மாறினார்கள். தங்கள் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொண்டார்கள். மேலும் அல்பினசின் மனைவி செந்திப்பாவும் தனது பாவ வாழ்கையை விட்டு பரிசுத்த வாழ்க்கைக்கு நேராய் திரும்பினாள். அகரிப்பாவும், அல்பினசும் பேதுருவின் மேல் கோபம் கொண்டு, அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

பேதுரு இறப்பதற்கு துணிந்து ரோம் நகருக்கு திரும்பினார். பேதுரு கண் முன்னே தன்னோடு நற்செய்திப்பணி செய்த தன் மனைவியை சிலுவையில் அறைந்தார்கள். இந்த காட்சியை பேதுரு காணுமாறு கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் பேதுரு சிலுவையில் துன்பப்படும் தன் மனைவியைப் பார்த்து, “நம் ஆண்டவர் நமக்காக சிலுவையில் தொங்கிய காட்சியை நினைத்துக்கொள்” என்று ஊக்கப்படுத்தினார்.

பேதுரு துணிவோடு இறப்பை கிறிஸ்துவுக்காக ஏற்றுக்கொண்டதால், சிறைச்சாலையில் பணிசெய்பவர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். தன் மனைவியை சிலுவையில் அறைந்ததை கண்டபின், பேதுருவை சிலுவையில் அறையும் நேரம் வந்தது. அப்பொழுது பேதுரு, “என் ஆண்டவர் சிலுவையில் நேராய் அறையப்பட்டு மரித்ததைப்போல நான் அறையப்பட தகுதியற்றவன். என்னைத் தலைகீழாக சிலுவையில் அறையவேண்டும்” என்று கேட்டு கொண்டார். பேதுரு கேட்டு கொண்ட வண்ணமாகவே சிலுவையில் தலைகீழாக அறைந்தார்கள். இவ்வாறு ஆண்டவருக்காய் சிறந்த ஊழியம் செய்து இரத்த சாட்சியாய் இறந்து திருச்சபையின் மூலைக்கல் ஆனார் சீமோன் பேதுரு.

தூய பேதுரு துன்பம் வந்தபோதும் இயேசுவின் மீதுள்ள பிடிப்பை விடவில்லை. கடைசி வரை அவரைத் தான் பிடித்திருந்தார். சிக்கெனப் பிடித்திருந்தார். தொடா்ந்து பின்பற்றி அவருக்காக தன்னுயிரையே கொடுக்கும் அளவுக்கு அவர் துணிந்தார். வாழ்வை வென்றார்.

மனதில் கேட்க…
1. இயேசுவை தொடா்ந்து அனுதினமும் என்னால் பின்பற்ற முடிகிறதா?
2. இயேசுவின் மீது எனக்கு அன்பு, பற்று, பிடிப்பு உள்ளதா? இருந்தால் தானே அது சிறப்பாக இருக்கும்?

மனதில் பதிக்க…
ஆண்டவரின் ஆட்சித்தலத்தில் வாழும் அனைத்துப் படைப்புகளே! ஆண்டவரைப் போற்றுங்கள்! என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு! (திபா 103:22)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.