இயேசுவை வரவேற்க ஆயத்தமாயிருப்போம்

இயேசுவிடத்திலே பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் அவரை மெசியா என்று நம்புவதற்கு அடையாளங்களையும், அருங்குறிகளையும் கேட்டனர். ஒரு மருத்துவர் நோயைக்கண்டறிவதற்கு உடலின் அருங்குறிகளை வைத்து, முடிவெடுப்பார். அதேபோலத்தான், அருங்குறிகளை வைத்து யூதர்கள் முடிவெடுத்தனர். ஆனால், இயேசு அவர்கள் கேட்பதன் பொருட்டு என்றுமே அருங்குறிகளை செய்து காட்டியதில்லை. அதே முறையைத்தான் இரண்டாம் வருகைக்கும் கையாள்கிறார்.

அருங்குறிகளையும், அடையாளங்களையும் வைத்து ஏமாற்றுகிறவர்களைக் குறித்து, இயேசு எச்சரிக்கையாகவும் இருக்கச்சொல்கிறார். இயேசுவின் இரண்டாம் வருகை நிச்சயமாக இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அது எப்போது என்று யாராலும் அறுதியிட்டுக்கூற முடியாது. அதைப்பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு, நம்முடைய நேரத்தையும் வீணாகக்கொண்டிருக்கத் தேவையில்லை. மாறாக, இயேசுவின் வருகையை முன்னிட்டு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். விருந்தினர் நமது வீட்டிற்கு வருகிறபோது, நாம் எல்லாவித ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, புத்தாடைகள் அணிந்துகொண்டு, அவர்களின் வருகையை எதிர்பார்த்து, ஆவலோடு காத்திருக்கிறோம். அதேபோல இயேசுவின் வருகைக்காக நாம் எல்லாநேரத்திலும் காத்துக்கொண்டிருக்க வேண்டும்.

இயேசுவின் வருகையை பணத்திற்காக, புகழுக்காக, களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் திரித்துக்கூறிக்கொண்டிருக்கக்கூடிய போதகர்களிடத்தில் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அவர்களிடம் நாம் ஏமாந்து போகாது, விழிப்பாயிருக்க வேண்டும். இரண்டாம் வருகையை பயத்தோடு அணுகாமல், நல்ல வாழ்வு வாழ்ந்துகொண்டு, விழிப்போடு வாழுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: