இயேசுவோடு இருத்தல்

”ஊரோடு ஒத்து வாழ்” என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். இது இந்த உலகக் கண்ணோட்டத்தை நமக்கு அறிவிக்கக்கூடிய சொற்றொடராக இருக்கிறது. இந்த உலகப்போக்கு எப்படி இருக்கிறதோ, அதற்கேற்ப நாம் வாழ வேண்டும். விழுமியம், மனச்சான்று போன்றவைகளுக்கு அங்கு வேலை இல்லை. நீதி, நியாயத்திற்கா நிற்க வேண்டும் என்பதல்ல. பத்து பேர் அநியாயத்தை, நியாயம் என்று சொன்னால், அதற்கு நாம் துணை நிற்பதுதான், இந்த பழமொழியில் பொருள்.

இயேசுவின் வார்த்தைகளைப் பின்பற்றினால், நாம் ஊரிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகத்தான் இருப்போம். ஏனென்றால், இன்றைக்கு 99 விழுக்காடு மக்கள் ஊரோடு ஒத்துவாழ பழகிவிட்டார்கள். புதிதாக நாம், விழுமியங்களுக்கு ஆதரவாகப் போராடுகிறபோது, நாம் தனித்து விடப்படுவோம். மற்றவர்களிடமிருந்து விலக்கி வைக்கப்படுவோம். அப்படி இருக்கிறபோது, நாம் கவலைப்படுவதற்கு பதிலாக மகிழ்ச்சி அடைய வேண்டும். காரணம், நாம் இயேசுவின் அருகில் இருக்கிறோம். இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். உண்மையை எடுத்துரைத்தார். அவரை இந்த அதிகாரவர்க்கம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆனால், அவர் கவலைப்படவில்லை. துணிந்து நின்றார். இயேசுவை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் துணிந்து நிற்போம். அதற்கான பலன் இயேசுவிடமிருந்து நமக்கு நிறைவாகக் கிடைக்கும்.

உலகத்தோடு ஒத்து வாழப் பழகிவிட்ட நமக்கு, நிச்சயம் இந்த இறைவார்த்தை மிகப்பெரிய சவுக்கடிகள். விழுமியங்களோடு சமரசம் செய்து கொள்ளப் பழகிவிட்டோம். அந்த நிலையிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். விழுமியங்களுக்காக நாம் துணைநிற்க வேண்டும். நிற்கிறவர்களோடு நாம் கரம் கோர்க்க வேண்டும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: