இயேசுவோடு இருப்போம்

நேர்மையான வழியில் இயேசுவை எதிர்கொள்ளமுடியாத, திராணியில்லாத இயேசுவின் எதிரிகள் அவர் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டு, ஆதாரமில்லாத பழியை அவர்மீது போடுகிறார்கள். இயேசு பழிச்சொற்களைக்கண்டு பயந்து நடுங்குகிற கோழையல்ல. அவர்களின் வார்த்தைகளைக்கொண்டே வாதத்தைத் தொடங்குகிறார். அவர்களின் தீய எண்ணத்தை முறியடிக்கிறார். இயேசுவின் வல்லமை கடவுளிடமிருந்து அல்ல, பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலிடமிருந்து வருகிறது என்பது அவருடைய எதிரிகளின் குற்றச்சாட்டு. இயேசு அவர்களுக்குத் தருகிற பதில்: ‘நான் பெயல்செபூலைக்கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால், உங்களைச்சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? என்பது. பாலஸ்தீனத்திலே பேயை ஓட்டுகிறவர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் சாலமோன் பேய் ஓட்டுவதற்கு கண்டுபிடித்த ஒருசில முறைகளை கையாண்டு பேய்களை ஓட்டிவந்தனர். அதை மக்கள் ஏற்றுக்கொண்டனர். எனவேதான், இயேசு அவர்களிடம் இப்படியொரு கேள்வியைக்கேட்கிறார். இயேசுவை அவர்கள் குற்றம் சாட்டுவது அவர்கள் மீதே அவர்கள் குற்றம்சாட்டுவதற்கு சமம்.

இயேசுவோடு இராதவர்கள் கடவுளோடு இல்லை என்பதாக இயேசு சொல்கிறார். “என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்”. இயேசுவோடு இணைந்திருக்க வேண்டும் என்ற அழைப்பு நமக்கு விடுக்கப்படுகிறது. நாம் இயேசுவோடு இணைந்திருக்கவில்லை என்றால், அதனுடைய பொருள் நாம் இயேசுவுக்கு எதிரானவர்களாக மாறிவிடுகிறோம். நாம் நடுநிலையானவர்களாக இருக்க முடியாது. ஒன்று இயேசுவோடு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நாம் இயேசுவுக்கு எதிரானவர்களாகவே கருதப்படுவோம். மதிப்பீடுகள் எவற்றோடும் நாம் எந்தச்சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ள முடியாது என்பதுதான் இயேசு நமக்கு கற்றுத்தரும் பாடம். நீதிக்காக நாம் குரல் கொடுக்காமல் ஒதுங்கி இருந்தால், அநீதியோடு இருக்கிறோம் என்பதுதான் அர்த்தமே ஒழிய, நான் அநீதிக்கு துணைபோகவில்லை என்று நம்மால் சொல்ல முடியாது.

பலவேளைகளில் இந்த சமூகத்திலே வாழ்ந்தாலும், அதிலிருந்து விலகியே வாழ்ந்துவருகிறோம். உண்மை சிதைக்கப்படும்போது, நமக்கென்ன? இதற்கும் நமக்கும் தொடர்பு இல்லை என்பதுபோல, பாராமுகமாய் இருக்கிறோம். அதுவும் உண்மையை குழிதோண்டிப் புதைப்பதற்கு சமம்தான். இந்த சமூகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுகம் என்னை ஏதாவது ஒருவகையில் உந்தித்தள்ள வேண்டும். அதுதான் இந்த சமூகத்தோடு மட்டுமல்ல, இயேசுவோடும் இணைந்திருப்பதற்கான வழி.

– அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: