இயேசு காட்டுகின்ற கடவுள்

”எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று யூதர்கள் இயேசுவிடத்திலே கேட்டார்கள். யூதர்கள் இப்படி கேட்டதற்கு பிண்ணனி இல்லாமல் இல்லை. யூதர்களைப்பொறுத்தவரையில் இந்த உலகத்திலே மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள். நல்லவர்கள், கெட்டவர்கள், இந்த இரண்டிற்கும் இடைப்பட்டவர்கள். அதாவது நல்லதும், கெட்டதும் செய்கிறவர்கள். இவர்கள் நன்மை அதிகமாகச்செய்தால், நல்லவர்கள் குழுவில் சேர்ந்துவிடுவார்கள். இயேசுவிடத்திலே மேற்சொன்ன கேள்வியைக்கேட்டபோது, அவர்கள் நல்லது செய்வதற்கான வழிமுறைகளை இயேசு சொல்வார் என்றுதான் எதிர்பார்த்தனர்.

ஆனால் இயேசு அவர்கள் எதிர்பாராத பதிலைச்சொல்கிறார். ”கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்” என்பதுதான் அந்தப்பதில். அதாவது நம்பிக்கை. நம்பிக்கை என்றால் என்ன? நம்பிக்கை என்பது கடவுள் உடனான ஓர் உறவுநிலை. நாம் கடவுளோடு கொள்ளக்கூடிய நட்புறவு. கடவுளைப்பார்த்து நாம் பயப்படத்தேவையில்லை. கடவுளைப்பார்த்து நாம் ஓடி ஒளியத்தேவையில்லை. கடவுளை நமது தந்தையாக, நல்ல நண்பராக எண்ணுவதுதான் நம்பிக்கை. இயேசுதான் கடவுளை நமக்குக்காட்டுகிறவராக, காட்டியவராக இருக்கிறார். எனவே, இயேசுவில் நம்பிக்கை வைப்பது, கடவுளை நாம் நெருங்கிவருவதற்கு உதவியாக இருக்கும்.

கடவுள் எப்படிப்பட்டவர்? என்பதை இயேசு நமக்குக்கற்றுத்தந்திருக்கிறார். காட்டியிருக்கிறார். இயேசு நமக்குக்காட்டியிருக்கிற கடவுளிடத்தில் முழுமையான அன்பு வைப்போம். அவரில் நாம் நம்பிக்கை கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: